இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், தனது எக்ஸ் (X) பக்கத்தில் வெளியிட்ட ஒரு வினோதமான புகைப்படம் சமூக வலைதளங்களில் பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது. பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோனின் படத்திற்கு அருகில், ஒரு சாதாரண தெருவின் படத்தை இணைத்து, எந்த வார்த்தையும் குறிப்பிடாமல் வெறும் இரண்டு கண் எமோஜிகளை மட்டும் அஸ்வின் பதிவிட்டிருந்தார்.

ஐ.பி.எல். ஏலம் நெருங்கும் நேரத்தில், இந்த வினோதப் பதிவு பலரையும் குழப்பியது. நடிகையின் படத்துடன் ஒரு தெருவைப் போட்டது ஏன் எனப் பலரும் விதவிதமாகக் கருத்துகளைப் பதிவிட்டு வந்த நிலையில், சிலர் இதற்கான உண்மையான பொருளைக் கண்டுபிடித்தனர்.

அஸ்வின் விளையாடியது ஒரு புத்திசாலித்தனமான வார்த்தை விளையாட்டு! அவர் சன்னி லியோனையும், அந்தத் தெருவையும் இணைத்து, ‘சன்னி’ மற்றும் ‘சந்து’ என்ற இரண்டு வார்த்தைகளையும் குறிப்பால் உணர்த்தியுள்ளார். இது இளம் தமிழக கிரிக்கெட் வீரர் சன்னி சந்துவை (Sunny Sandhu) பாராட்டும் விதமாக இடப்பட்ட பதிவு என்று தெரியவந்துள்ளது. சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 தொடரில், சவுராஷ்டிரா அணிக்கு எதிரான போட்டியில் தமிழக அணிக்காக ஆடிய சன்னி சந்து, வெறும் 9 பந்துகளில் 30 ரன்கள் குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

குறிப்பாக, சேத்தன் சக்காரியாவின் ஒரே ஓவரில் 26 ரன்கள் அடித்து பிரமிக்க வைத்த அவரது அதிரடி ஆட்டத்தைப் பாராட்டவே, அஸ்வின் இந்த வினோதமான ட்வீட்டைப் போட்டு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.