திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் உத்தமப்பாளையம் வட்டமலை அணை அருகே, வனப்பகுதியில் உடல் கருகிய நிலையில் ஒருப் பெண் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில், ஓய்வு பெற்றக் காவலர் ஒருவரைக் கைது செய்தபோதுப் பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொலை செய்யப்பட்டவர் பழனி நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த வடிவுக்கரசி (45) என்றும், அவரைக் கொலை செய்தவர் அதே ஊரைச் சேர்ந்த ஓய்வு பெற்றப் போலீஸ் அதிகாரி சங்கர் (55) என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சங்கருக்கு நான்கு மனைவிகள் இருக்கும் நிலையில், வடிவுக்கரசியுடன் கள்ளக்காதல் இருந்துள்ளது. இருவரும் சேர்ந்து வடிவுக்கரசியின் உறவினர்களுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறிப் பணம் வாங்கியுள்ளனர்.
அந்தப் பணத்தைச் செலவழித்துவிட்டு வேலை வாங்கித் தராததால், பணத்தைக் கொடுத்தவர்கள் வடிவுக்கரசிக்குப் பிரச்சினை கொடுக்கவே, அவர் சங்கரிடம் பணத்தைத் திரும்பக் கேட்டுள்ளார்.
இதனால் ஏற்பட்டத் தகராறில், சங்கர் அவரை வெள்ளக்கோவில் வட்டமலை அணைப் பகுதிக்கு அழைத்து வந்து மது அருந்திவிட்டு, பணம் கேட்டுத் தொல்லைக் கொடுத்ததால் அருகில் இருந்த கருங்கல்லைத் தூக்கித் தலையில் போட்டுக் கொலை செய்துள்ளார்.
கொலைக்குப் பிறகு, அவர் அணிந்திருந்த 6 பவுன் நகையைப் பறித்து, அடையாளம் தெரியாமல் இருக்கச் சடலத்தைத் தீ வைத்து எரித்துவிட்டுத் தப்பிச் சென்றதாகச் சங்கர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
