இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் ஒரு மாணவருக்குப் பதக்கத்தை அணிவித்தவுடன், அந்த மாணவர் உடனடியாகப் பதக்கத்தைக் கழற்றிவிட்ட காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் தீவிரமாகப் பரவி வருகிறது. இதைப் பார்த்த பலர், “அந்தச் சிறுவன் ஏன் அவ்வாறு நடந்துகொண்டார்?” என்று கேள்வி எழுப்பி, இது குறித்துப் பலரும் தங்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

 

ஒரு பயனர், “குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதக்கத்தை அணிவித்தார், ஆனால் அந்தச் சிறுவன் அதைக் கழற்றிவிட்டார். ஏன் என்று சொல்ல முடியுமா?” என்று ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டிருந்தார். பயனர்களின் கருத்துப்படி, அந்தச் சிறுவன் ‘ஆட்டிசம்’ போன்ற நரம்பியல் ரீதியான வேறுபாட்டினால் பாதிக்கப்பட்ட சிறப்புத் திறன் கொண்ட குழந்தை என்றும், இது உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நடந்த விருது வழங்கும் விழாவின் ஒரு பகுதி என்றும் கூறப்படுகிறது.

இந்தச் சிறுவன் மனநலக் குறைபாடுடையவர் என்றும், சம்பவத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்பதால், பதக்கத்தை உடனடியாக அகற்றிவிட்டார் என்றும் பலர் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர். ஒரு பயனர், “அவன் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தை. அவர்களுக்குச் சமூகச் சூழ்நிலைகளிலும் புதிய விஷயங்களை ஏற்றுக்கொள்வதிலும் சிரமம் இருக்கும்.

மேலும், சில விஷயங்கள் தங்கள் உடலைத் தொடும்போது அல்லது தங்களுக்குப் பிடிக்காதபோது அவர்கள் அதை விலக்குவார்கள். இதில் அவர்களின் தவறு எதுவும் இல்லை” என்றும் விளக்கமளித்துள்ளார். இந்தக் காணொளியை விவாதப் பொருளாக்காமல், சிறப்புத் திறன் கொண்ட குழந்தைகளுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகின்றனர்.