அடுத்த ஆண்டு (2026) ஏப்ரல் மாதம் நடைபெறவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான அறிவிப்புப் பிப்ரவரி மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஆளும் திமுக, அதிமுக, தவெக உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளைத் தீவிரமாக முடுக்கிவிட்டுள்ளன.
இந்தக் கூட்டணிப் பேச்சுவார்த்தை, பொதுக்கூட்டம் மற்றும் கட்சி பலப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவரும் சூழலில், ஓ.பன்னீர்செல்வத்தின் (ஓபிஎஸ்) முக்கிய ஆதரவாளரும், சட்டமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கம் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் துணை ஒருங்கிணைப்பாளராக இருந்து வரும் வைத்திலிங்கம், அங்கிருந்து விலகி தவெக-வில் இணைய உள்ளதாகக் கூறப்படுவது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்டா பகுதியில் தவெக-வின் வியூகம்:
முன்னாள் அமைச்சரான வைத்திலிங்கம், 2001-2006 மற்றும் 2011-2016 காலகட்டத்தில் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் அமைச்சராகப் பதவி வகித்தவர். தற்போது இவர் ஒரத்தநாடு சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.
கடந்த மாதம் தான் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெக-வில் இணைந்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்திலிங்கமும் தவெக-வில் இணைய இருப்பது எடப்பாடி பழனிசாமி தரப்புக்குக் கூடுதல் நெருக்கடியைக் கொடுத்துள்ளது. கொங்கு பகுதியைக் குறிவைத்து செங்கோட்டையனைத் தவெக-வில் சேர்த்த நிலையில், தற்போது டெல்டா பகுதிகளைக் குறிவைத்தே வைத்திலிங்கத்தைச் சேர்க்கத் தவெக திட்டமிட்டு வருவதாக அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
