கரூர் நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் விபத்தில் 41 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, தவெக தலைவர் விஜய் இன்று முதல் முறையாக பொதுவெளியில் பங்கேற்ற நிகழ்ச்சி புதுச்சேரி உப்பளம் துறைமுக வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன. ஸ்கேனிங் முறையில் 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், அதிகாலை முதலே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பரிசோதனையைத் தொடர்ந்து மக்கள் நிகழ்ச்சி நடைபெறும் வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர் மேடையேறிய விஜய், ரசிகர்களை கையசைத்து வரவேற்றார். தொடர்ந்து உரையாற்றிய அவர், “மத்திய அரசிற்கு தமிழ்நாடு, புதுச்சேரி என தனித்தனி மாநிலங்களாக இருந்தாலும், நமக்கு நாம் அனைவரும் ஒன்றுதான். தனி மாநிலம் என்றாலே நாம் சொந்தங்கள் அல்ல என்பது தவறு” என்று கூறினார். “தமிழகத்தில் எம்ஜிஆரை மறக்காதீர்கள் என்று முதலில் எச்சரித்தது புதுச்சேரி தான். நான் தமிழ்நாட்டுக்கே மட்டும் குரல் கொடுப்பேன் என யாரும் நினைக்க வேண்டாம்; புதுச்சேரியின் உரிமைக்குரலும் நிச்சயம் கொடுப்பேன்” என தெரிவித்தார்.
மேலும், கூட்டத்துக்கு வந்த மக்களுக்கு புதுச்சேரி அரசு சிறந்த பாதுகாப்பு அளித்து வருவதைப் பாராட்டிய அவர், “இதைக் கண்டு தமிழ்நாடு முதலமைச்சரும் கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் கற்றுக்கொள்ள மாட்டார்கள்; வரும் தேர்தலில் மக்கள் தாமே தீர்ப்பளிப்பார்கள்” என்றார். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்காத மத்திய அரசை விமர்சித்த விஜய், “சட்டமன்றம் பலமுறை தீர்மானம் நிறைவேற்றியிருந்தும் இதுவரை அந்தஸ்து வழங்கப்படவில்லை. வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை, ஐடி நிறுவனங்கள் வரவில்லை. 200 நாட்களாக ஒரு அமைச்சருக்கு பொறுப்பே ஒதுக்கப்படவில்லை. காரைக்கால் பகுதி புறக்கணிக்கப்பட்டுள்ளது” என குற்றம்சாட்டினார்.
புதுச்சேரியில் போதிய பார்க்கிங் வசதி, கழிப்பிட வசதி இல்லாமை உள்ளிட்ட பிரச்சினைகளையும் அவர் வெளிப்படுத்தினார். மேலும் “புதுச்சேரிக்கு ஒன்றிய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை. அதனால் கடன் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் ரேஷன் கடை இல்லாத ஒரே மாநிலம் புதுச்சேரி. திமுகவை நம்பாதீர்கள்; புதுச்சேரி மக்களுக்காக நான் எப்போதும் துணை நிற்பேன்” என்றார். மேலும் இறுதியாக, “வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகத்தின் கொடி புதுச்சேரியிலும் வெற்றி கொடியுடன் பறக்கும்” என விஜய் உறுதியளித்தார்.
