திமுக முன்னாள் எம்.பி. மற்றும் திமுக விவசாய அணி மாநில செயலாளர் ஏ.கே.எஸ். விஜயனின் தஞ்சாவூர் சேகரன் நகர் பகுதியில் உள்ள வீட்டில் இடம்பெற்ற கொள்ளை தொடர்பாக நால்வர் கைது செய்யப்பட்டனர். கடந்த 28ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூருக்கு சென்ற விஜயன், டிசம்பர் 1ஆம் தேதி வீடு திரும்பிய போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டதும் அதிர்ச்சி அடைந்துள்ளார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு நகைகள், வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
முதலில் சுமார் 300 சவரன் நகைகள் திருடப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், பின்னர் நடத்தப்பட்ட சரிபார்ப்பில் 87 சவரன் நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்கள் காணாமல் போயிருந்தது உறுதியாகியுள்ளது. இதுகுறித்து விஜயன் தரப்பு தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, தனிப்படையினர் அமைக்கப்பட்டு அப்பகுதியின் சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. விசாரணையில், தர்மபுரியை சேர்ந்த ஒரு குடும்பம் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து, தர்மபுரியில் பதுங்கியிருந்த முகமது யூசுப் மனைவி பாத்திமா ரசூல் (54), மகன்கள் மொய்தீன் (37), சாதிக் பாஷா (33), மகள் ஆயிஷா பர்வீன் (30) ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து திருடப்பட்ட நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்கள் மீட்கப்பட்டன.
மேலும் கைது செய்யப்பட்ட நால்வரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதே குடும்பத்தைச் சேர்ந்த ஷாஜகான் (26) என்ற இளைஞர் தலைமறைவாக உள்ளதால், அவரை கைது செய்ய போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
