தமிழக அரசியலில் அனுபவம் மிக்க பேச்சாளரான நாஞ்சில் சம்பத், சமீபத்தில் தவெக தலைவர் விஜயை சந்தித்து அக்கட்சியில் இணைந்தார். அவருக்கு பரப்புரை செயலாளர் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. இணைந்ததும் தவெக குறித்து பாராட்டுகளையும், திமுக குறித்து கடும் விமர்சனங்களையும் வெளிப்படுத்தி வரும் அவரது அண்மை கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, தவெக இணைவு குறித்து பேசிய அவர், “லட்சக்கணக்கான இளைஞர்களை மூலதனமாக வைத்துள்ள கட்சிதான் தவெக. காமராஜர், அம்பேத்கர் போன்றவர்களை முன்னுதாரணங்களாகக் கொண்டிருப்பது என்னை கவர்ந்தது,” என தெரிவித்திருந்தார். மேலும்,
“ஆறு ஆண்டுகளாக செயலற்ற நிலையில் இருந்த என்னை மீண்டும் இயக்கியது விஜய் தான்,” என பாராட்டியிருந்தார். அதே நேரத்தில் திமுக குறித்து, “நான் விஜய்க்கு ஆதரவு அளிக்கத் தொடங்கியதிலிருந்து அறிவாலயத்தில் இருந்து என்னை வசைபாடத் தொடங்கினர். நான் திமுக தலைமையிடம் எதையும் கேட்கவில்லை. கேட்டாலும் ஒரு சைக்கிள் கூட தரமாட்டார்கள்,” என்று விமர்சித்தார்.
அறிவாலயத்துக்கு போனா சுடுகாடு மாதிரி இருக்கும்🤣
தவெக அலுவலகம் பிரமாதம் நாளைக்கே யுத்தம்னாலும் களத்துல வர ரெடியா இருக்காங்க – @NanjilPSampath 💥 pic.twitter.com/8MGLLJDRz5— priya (@PriyankaSmile01) December 6, 2025
இந்நிலையில், தவெக அலுவலகத்தையும் அறிவாலயத்தையும் ஒப்பிடும் விதமாக நாஞ்சில் சம்பத் கூறிய கருத்து புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஒரு பேட்டியில் அவர்,
“நேற்று தவெக அலுவலகம் சென்றேன். மிகப் பிரமாண்டமாக இருந்தது. அறிவாலயம் போனால் சுடுகாடு மாதிரி இருக்கும். தவெக அலுவலகத்தில் 400க்கும் மேற்பட்ட இளைஞர்கள் லேப்டாப் வைத்துக்கொண்டு தொகுதி வாரியாக வாக்காளர் விவரங்கள் அனைத்தையும் தயார் செய்து களப் பணிக்குத் தயாராக இருக்கிறார்கள். திமுகவை விட தவெகவின் தேர்தல் பணிகள் தொழில்நுட்ப ரீதியாக மிக முன்னேற்றமாக உள்ளன,” என்று தெரிவித்தார்.
மதிமுக, அதிமுக ஆகியவற்றை விட்டு வெளியேறிய பின்னர் சுமார் ஆறு ஆண்டுகளாக அரசியல் பணிகளில் ஈடுபடாத நாஞ்சில் சம்பத், திராவிட இயக்க பேச்சாளராக தொடர்ந்து திமுகவுக்கு ஆதரவாகப் பேசி வந்தவர். அவர் விஜய்க்கு ஆதரவாகப் பேசத் தொடங்கியபோது, தாங்கள் நடத்தும் அறிவுத்திருவிழாவில் திமுக அழைப்பு விடுக்காதது அவருக்கு மனக் காயத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் தவெகவில் இணைந்த பின்னர், திமுக மீது அவர் வெளிப்படையாக விமர்சனம் தொடங்கியிருப்பது, திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
