திருப்பரங்குன்றம் சுப்பிரமணியஸ்வாமி கோயில் தீப விவகாரம் கடந்த சில நாட்களாக மாநிலம் முழுவதும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியது. நீதிமன்றம் தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் தீபம் ஏற்ற அனுமதி வழங்குமாறு உத்தரவிட்டபோதும், தர்கா அருகே தீபம் ஏற்றினால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் எனக் கூறி, பாரம்பரிய இடத்திலேயே தீபம் ஏற்றப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்தது.

இந்த முடிவை கடுமையாக எதிர்த்த பாஜக, “நீதிமன்ற தீர்ப்பை திமுக அரசு மதிக்கவில்லை; இந்துக்களின் வழிபாட்டு உரிமையை தடுக்கிறது” என குற்றம்சாட்டியது. இந்நிலையில், தீப விவகாரம் சூடுபிடித்த போது, கடந்த வியாழக்கிழமை பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா காரைக்குடியிலிருந்து திருப்பரங்குன்றம் நோக்கிப் புறப்பட்டார். இதுகுறித்த தகவல் அறிந்த திருப்பத்தூர் போலீசார் கும்மங்குடி அருகே அவரது வாகனத்தை தடுத்து நிறுத்தினர். இதனால் எச். ராஜா மற்றும் பாஜகவினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த நேரத்தில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளை எச். ராஜா அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, எச். ராஜாவுக்கு எதிராக திருப்பத்தூர் போலீசார் மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவை: அரசு அதிகாரிகளை கடமை செய்ய விடாமல் தடுத்தல், மத கலவரத்தை தூண்டும் வகையில் பேச்சு, முதல்வர் மற்றும் அமைச்சர்களை அவதூறாக பேசிய குற்றம் போன்ற பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பான பதற்றம் இன்னும் நிலவி வரும் நிலையில், எச். ராஜாவிற்கு எதிரான வழக்குப்பதிவு அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது