உதயநிதி ஸ்டாலின் விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசும்போது, எஸ்.ஐ.ஆர். (SIR) என்ற திட்டத்தின் மூலம் பா.ஜ.க. அரசு தேர்தல் ஆணையம் வழியாக நமது வாக்களிக்கும் உரிமையைப் பறிக்க முயற்சிக்கிறது என்று குற்றம் சாட்டினார். பா.ஜ.க.வுக்கு எதிராக வாக்களிக்கும் இஸ்லாமியர்கள், பெண்கள், ஒடுக்கப்பட்ட மக்களின் வாக்குரிமையைத் தடுத்து நிறுத்துவதே இந்த எஸ்.ஐ.ஆர். திட்டத்தின் முக்கிய நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், அ.தி.மு.க.வின் கட்டுப்பாட்டை அமித் ஷா குத்தகைக்கு எடுத்துவிட்டதாகவும், இதனால் எடப்பாடி பழனிசாமியின் பேச்சுகள் அ.தி.மு.க. அலுவலகத்தில் இருந்து வந்ததா அல்லது பா.ஜ.க. அலுவலகத்தில் இருந்து வந்ததா என்று தெரியாத அளவுக்கு இருப்பதாகவும் உதயநிதி விமர்சித்தார்.

தமிழ்நாட்டில் ஏதேனும் ஒரு மதக் கலவரத்தை ஏற்படுத்தி எப்படியாவது உள்ளே நுழைய முடியுமா என்று பா.ஜ.க. பல வழிகளில் முயற்சி செய்கிறது. ஆனால், அவர்களின் இந்த முயற்சி தமிழ்நாட்டில் பலனளிக்காது என்று அவர் உறுதியாகக் கூறினார்.

ஏனெனில், இப்போது தமிழ்நாட்டில் நடப்பது எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி இல்லை என்றும், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையிலான சுயமரியாதை ஆட்சி, அதாவது திராவிட மாடல் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என்றும் தெரிவித்தார்.

கருப்பு-சிவப்பு கரை வேட்டி அணிந்தவர்கள் இருக்கும் வரை, சங்பரிவார் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டில் கால் பதிக்க முடியாது என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார்.