சட்டப்பூர்வ திருமண வயதை எட்டாதிருந்தாலும், வயது வந்த இருவரும் முழு சம்மதத்துடன் இருந்தால், அவர்கள் லிவ்–இன் உறவில் சேருவதற்கு எந்த தடையும் இல்லை என்று ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. ராஜஸ்தானின் கோட்டாவைச் சேர்ந்த 18 வயது இளம் பெண் மற்றும் 19 வயது இளைஞர் தாக்கல் செய்த ரிட் மனு விசாரணையின் போது, தனி நீதிபதி இந்தக் கருத்தை வெளியிட்டார். இருவரும் விருப்பத்தோடு சேர்ந்து வாழ முயன்ற நிலையில் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், இதனால் தங்களுக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாகவும் அவர்கள் மனுவில் கூறியிருந்தனர்.
காவல்துறையை அணுகியபோது, இளைஞர் 21 வயதை எட்டவில்லை என்பதால் நடவடிக்கை எடுக்க முடியாது என அதிகாரிகள் தெரிவித்ததாகவும் மனுதாரர்கள் குற்றம் சாட்டினர். இதையடுத்து போலீசார் பாதுகாப்பு வழங்க வேண்டுமென உயர் நீதிமன்றத்தை நாடினர். இச்சம்பவத்தில் அரசு தரப்பு, இளைஞர் திருமணத்திற்கான சட்ட வயதுக்கு வராததால், இருவரும் லிவ்–இன் உறவில் ஒன்றாக வாழ அனுமதி அளிக்கக் கூடாது என்று வாதிட்டது. அரசின் வாதத்தை தள்ளுபடி செய்த நீதிபதி, தனது தீர்ப்பில் கூறியதாவது:
18 வயது அல்லது அதற்கு மேலானவர்கள் இந்தியச் சட்டப்படி வயது வந்தவர்களாக கருதப்படுகிறார்கள். வயது வந்தவர்களுக்கு, இணைந்து வாழும் முடிவு உட்பட, தனிப்பட்ட வாழ்க்கைத் தேர்வுகளைச் செய்யும் உரிமை உண்டு. திருமண வயதை எட்டாததால் மட்டுமே அவர்களின் அடிப்படை உரிமைகளை மறுக்க முடியாது. இந்திய சட்டத்தில் லிவ்–இன் உறவு சட்டவிரோதமோ, குற்றமோ அல்ல. மேலும் ” தொடர்ந்து, மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ள அச்சுறுத்தல்களை கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் முறையான ஆய்வு மேற்கொண்டு, தேவையான பாதுகாப்பு வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
