விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட கே.செவல்ப்பட்டியில், ரூ.1.38 கோடியில் மின் மயானம் கட்ட டெண்டர் எடுத்துப் பணியை முடித்திருந்தார் செல்லூரைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் பழனிக்குமார்.

பணிகள் முடிந்த நிலையில், கட்டிடம் கட்டுவதற்கான பில் தொகையில் ரூ.1 கோடியே 16 லட்சத்து 48 ஆயிரத்து 160 வழங்கப்பட்டுவிட்டது. மீதமுள்ள தொகையை அனுமதித்து வழங்கும்படி, காரியாபட்டி பேரூராட்சி அலுவலகத்தின் இளநிலை என்ஜினீயர் கணேசனிடம் (54) பழனிக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார். அப்போது, தொகையை அனுமதிப்பதற்காக என்ஜினீயர் கணேசன், பழனிக்குமாரிடம் ரூ.3 லட்சம் லஞ்சமாகக் கேட்டுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத பழனிக்குமார், இது குறித்து உடனடியாக விருதுநகர் லஞ்ச ஒழிப்புப் போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசாரின் ஆலோசனைப்படி, இரசாயனப் பவுடர் தடவப்பட்ட ரூ.50 ஆயிரத்தைக் கணேசனிடம் கொடுப்பதற்காக பழனிக்குமார் காரியாபட்டி பேரூராட்சி அலுவலகம் சென்றார்.

பணத்தை என்ஜினீயர் கணேசன் பெற்றபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரிகள் அவரைக் கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர். டெண்டர் தொகையில் மீதமுள்ள பணத்தை வழங்குவதற்காக லஞ்சம் கேட்டு சிக்கிய இந்தச் சம்பவம், அரசு அலுவலகங்களில் நடைபெற்று வரும் ஊழலை மீண்டும் ஒருமுறை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.