தென்காசி மாவட்டம் சிவகிரி, அம்பேத்கர் தெற்குத் தெருவைச் சேர்ந்த வேன் ஓட்டுநர் பிரகாஷ் என்பவரின் மனைவி பொன் ஆனந்தி (26), தான் ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்ததால் ஏற்பட்ட மனவேதனையில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு காதலித்துத் திருமணம் செய்துகொண்ட இந்தத் தம்பதிக்கு, இரண்டரை வயதில் புகழினி என்ற பெண் குழந்தை உள்ளது. கணவர் கோவையில் பணிபுரிய, கடையநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்த பொன் ஆனந்தி, தனது குழந்தையைப் பாவூர்சத்திரத்தில் உள்ள பெற்றோர் வீட்டில் தங்க வைத்திருந்தார்.
கடந்த முன்தினம் காலையில் பொன் ஆனந்தியின் மாமியார் செல்வி வீட்டிற்குச் சென்றபோது, கதவு திறக்கப்படாததால், மற்றொரு சாவியைக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, பொன் ஆனந்தி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
தகவல் அறிந்து விரைந்த சிவகிரி போலீசார், அறையில் இருந்த உருக்கமான கடிதம் ஒன்றைக் கைப்பற்றினர். அதில், “என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை, ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்ததால் இந்த முடிவை எடுத்தேன்” என்று எழுதப்பட்டிருந்தது. பணியின் மத்தியிலும் ஆன்லைன் விளையாட்டில் ஆர்வம்காட்டிய அவர், ரூ.63,000 இழந்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.
மேலும், திருமணமாகி மூன்றரை ஆண்டுகளே ஆவதால் சங்கரன்கோவில் உதவி கலெக்டர் அனிதா தலைமையிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
