தி.மு.க., ம.தி.மு.க., அ.தி.மு.க. எனத் தமிழ்நாட்டின் மூத்த கட்சிகளில் பயணித்த மூத்த பேச்சாளர் நாஞ்சில் சம்பத், இன்று நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். மறைந்த ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் எந்த அரசியல் கட்சியிலும் சேராமல் இருந்ததாகவும், பெரியார், அண்ணா ஆகியோரின் இலட்சியங்களைப் பேசிய வந்த தான், இப்போது தவெகவில் இணைந்திருப்பது உற்சாக மனநிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

“என்னைப் பார்த்து நான் உங்கள் ரசிகர் என்று விஜய் கூறினார். உடனே நான் மெய்சிலிர்த்து போனேன்” என்று நாஞ்சில் சம்பத் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். மேலும், தான் ஒரு தொலைக்காட்சித் தொடரில் விஜய்க்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்ததால் தி.மு.க.வினர் தன்னை வசைபாடினர். இதனால் மனமுடைந்து போனேன். தி.மு.க.வின் அறிவுத் திருவிழாவில் என்னை திட்டமிட்டு நிராகரித்தனர் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டபின் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த நாஞ்சில் சம்பத், “நான் இயங்குவதற்கான வாய்ப்பை விஜய் வழங்கியிருக்கிறார். நாடு முழுவதும் பரப்புரை செய்ய விஜய் எனக்கு அனுமதி தந்துள்ளார்” என்று கூறினார். மேலும், தவெகவில் திராவிடம் உள்ளது. பெயரில் இல்லாமல் இருக்கலாம். தமிழ் தேசியமும், திராவிட தேசியமும் ஒன்றுதான்.

திராவிட இயக்கத்தின் நீட்சியாகவே விஜய்யைப் பார்க்கிறேன் என்றும் அவர் ஆணித்தரமாகத் தெரிவித்தார். லட்சக்கணக்கான இளைஞர்களை மூலதனமாக வைத்திருக்கும் ஒரே இயக்கம் தவெக தான் என்று குறிப்பிட்ட அவர், அதிரடி மாற்றங்களைச் செய்வதற்கு விஜயிடம் திட்டம் இருப்பதாக நம்புவதாகக் கூறினார்.

திருப்பரங்குன்றம் சம்பவம் குறித்து விஜய் பேசாமல் இருப்பது, அதில் ஒரு தரப்புக்கு ஆதரவாகவும், ஒரு தரப்புக்கு எதிராகவும் கருத்து சொல்லாமல் இருப்பது விஜய்க்கு நல்லது என்று நாஞ்சில் சம்பத் தனது கருத்தைப் பதிவு செய்தார்.