ஆசிட் வீச்சு சம்பவம் தொடர்பான ஒரு வழக்கு, 16 ஆண்டுகளாக நிலுவையில் இருப்பதை சுப்ரீம் கோர்ட் நேற்று கடுமையாக கண்டித்தது. தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பாக்சி அடங்கிய இரு நீதிபதிகள் அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. விசாரணையின் போது, பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் ஆஜராகிய வழக்கறிஞர், “இந்த ஆசிட் வீச்சு சம்பவம் 2009-ஆம் ஆண்டு நடந்தது” என்று தெரிவித்தார். இதைக் கேட்ட தலைமை நீதிபதி சூர்யகாந்த் அதிர்ச்சி தெரிவித்து,

“16 ஆண்டுகளாக வழக்கு நிலுவையிலா? இது எந்த நீதிமன்றத்தில் நடக்கிறது?” என கேள்வி எழுப்பினார். பாதிக்கப்பட்ட பெண் தரப்பு, அந்த வழக்கு டெல்லி ரோகிணி நீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் இருப்பதாக தகவல் அளித்தது. மேலும், தற்போது அந்த பெண், ஆசிட் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பல பெண்களின் நலனுக்காக சமூகப் பணியில் ஈடுபட்டு வருவதாகவும், சில பெண்கள் ஆசிட் குடிக்க வைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்ட சம்பவங்களுக்கும் நீதி கேட்டு போராடி வருவதாகவும் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.

இதை கேட்ட தலைமை நீதிபதி சூர்யகாந்த், “2009-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கை 16 ஆண்டுகளாக முடிக்காமல் விட்டதற்கான காரணத்தை சுப்ரீம் கோர்ட்டில் மனு மூலம் விளக்குங்கள். அவசியமெனில் சுப்ரீம் கோர்ட்டே தாமாக முன்வந்து விசாரிக்கும். நாட்டுத் தலைநகரிலேயே இப்படியான தாமதமா? இது வெட்கக்கேடானது. குற்றவியல் விசாரணை இவ்வளவு தாமதப்படுவது நீதித்துறையையே கேலி செய்வதற்குச் சமம்,” என்று கடுமையாக எச்சரித்தார்.

அதைத்தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள ஐகோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள அனைத்து ஆசிட் வீச்சு வழக்குகளின் விவரங்களையும் தாக்கல் செய்ய, அந்தந்த உயர் நீதிமன்ற பதிவாளர்களுக்கு உத்தரவிடப்பட்டது. மேலும் வழக்கின் தொடர்ந்த விசாரணை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.