உத்தரப் பிரதேச மாநிலம், காசியாபாத் மாவட்டத்தில் நிகழ்ந்த ஒரு திடுக்கிடும் சம்பவம் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மோடிநகர் டவுனில் உள்ள கோவிந்த்புரி பகுதியில் அமைந்துள்ள ஒரு நகைக்கடையில், நேற்று முகமூடி அணிந்த ஒரு நபர் கத்திக் குத்துத் தாக்குதல் நடத்தி, அதன் உரிமையாளரைக் கொலை செய்துள்ளார். கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் இந்தக் கொடூரக் காட்சி பதிவாகியுள்ளது.
இந்த பதறவைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. வீடியோவில், கடைக்குள் நுழைந்த அந்த நபர், உரிமையாளர் கிரிதாரி லால்லை நோக்கி ஓடிச் சென்று, அவர் கண்களில் முதலில் மிளகாய்ப் பொடியைத் தூவிவிட்டு, பின்னர் கூர்மையான ஆயுதத்தால் சரமாரியாகக் குத்தியது பதிவாகியுள்ளது. சத்தம் கேட்டு கடைக்குள் ஓடிவந்த கிரிதாரி லாலின் உறவினர் எனக் கருதப்படும் நபர், கொலையாளியுடன் மோதி, அவரை கட்டுப்படுத்த முயன்றார்.
Law and order in UP: Exhibit 21372
Warning: Disturbing video
An assailant threw chilli powder and stabbed to death a jeweller sitting inside his shop in Modinagar town of Ghaziabad district in UP. A person alerted by the commotion tried to confront the attacker who was later… pic.twitter.com/cu7Lq5aNSP
— Piyush Rai (@Benarasiyaa) December 4, 2025
இருப்பினும், அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். பின்னர், அந்த நபரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்து, காவல்துறையிடம் ஒப்படைத்தனர். காவல்துறையினர் அந்த நபரிடமிருந்து கொலைக்குப் பயன்படுத்திய ஆயுதத்தையும் மற்றும் மிளகாய்ப் பொடியையும் மீட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தாக்குதலில் படுகாயமடைந்த நகைக்கடை உரிமையாளர் கிரிதாரி லால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
லாலின் சகோதரரும் இந்தத் தாக்குதலில் காயமடைந்தார். அவர் அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டதாகக் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதலுக்கான நோக்கம் இன்னும் தெரியவில்லை. இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், இந்தக் சதித்திட்டத்தில் வேறு யாருக்காவது பங்கு உள்ளதா என்றும் காவல்துறை விசாரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தைக் கண்டித்தும், கடும் நடவடிக்கை கோரியும் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில், உத்தரப் பிரதேச காங்கிரஸ் கட்சி, ஆளும் பா.ஜ.க தலைமையிலான மாநில அரசைக் கண்டித்து, “இது வெறும் கொலையல்ல; மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளதற்கான நேரடி ஆதாரம்” என்று கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளது.
