திருப்பரங்குன்றத்தில் நேற்று கார்த்திகை தீபத்தை முன்னிட்டு உச்சிப் பிள்ளையார் கோவிலில் வழக்கம் போல் தீபம் ஏற்றப்பட்டது. அதே நேரத்தில் இந்து முன்னணி அமைப்பு தலைவர்  மதுரை கிளை நீதிமன்றத்தில் தர்கா அருகே உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி வேண்டும் என வழக்கு தொடர்ந்த நிலையில் அந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன் அவருக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

ஆனால் நேற்று அரசு உச்சிப் பிள்ளையார் கோவிலில் வழக்கம் போல் தீபத்தை ஏற்றுமாறு அறிவுறுத்தியதால் அங்கு ஏற்றப்பட்டது. இது தொடர்பாக மத்திய பாதுகாப்பு படையினரை மனுதாரருடன் நீதிபதி அனுப்பி வைத்து தீபத்தூணில் தீபம் ஏற்றுமாறு அனுப்பினார். ஆனால் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதோடு மத்திய பாதுகாப்பு படையினரை அங்கிருந்து திருப்பி அனுப்பியது. இதனால் அங்கு தீபம் ஏற்ற முடியவில்லை.

இந்த நிலையில் தமிழக அரசு இது தொடர்பாக தாக்கல் செய்த மேல் முறையீடு மனுவை திரு அமர்வு நீதிபதிகள் தள்ளுபடி செய்த நிலையில் இந்த வழக்கை தனி நீதிபதி மீண்டும் விசாரிப்பார் என்று தெரிவித்தது. அதன்படி இன்று மீண்டும் நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர காவல் ஆணையர் காணொளி வாயிலாக ஆஜராகி தொடர்பாக விளக்கம் கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

அதேபோன்று அவர்களும் விளக்கம் கொடுத்த நிலையில் தற்போது நீதிபதி திருப்பரங்குன்றத்தில் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவை ரத்து செய்ததோடு உடனடியாக அதாவது இன்று மாலை 7 மணிக்குள் மனுதாரருக்கு தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கியுள்ளார். இதற்கு மதுரை மாநகர காவல் ஆணையர் முழு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். மேலும் இந்த உத்தரவை நிறைவேற்றியதற்கான அறிக்கையை நாளை காலை 10.30 மணிக்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.