தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வரும் 590 சார்பதிவாளர் அலுவலகங்கள் மூலம் சொத்து பரிமாற்றம், திருமண பதிவு, உயில், கடன் ஆவணங்கள், குடும்ப ஏற்பாடு உள்ளிட்ட முக்கிய பதிவுகள் தினசரி நடைபெற்று வருகின்றன. இதனால் பத்திரப்பதிவு அலுவலகங்களில் பொதுமக்கள் அதிகமாக வருகை தருவதால், ஆவணங்களை பெற நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.

இந்த சூழ்நிலையை மாற்றும் நோக்கில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில், பதிவுத்துறை தலைவர் (ஐ.ஜி.) தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் பல்வேறு டிஜிட்டல் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி பதிவுத்துறையின் புதிய ‘ஸ்டார் 3.0’ திட்டம் விரைவில் அறிமுகமாக உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் குடியிருப்பு வீடுகள், மனைப்பிரிவு போன்ற சொத்துகளை வாங்க–விற்க வீட்டிலிருந்தபடியே பத்திரப்பதிவு செய்யலாம்.

வாங்குபவர், விற்பவர் விவரங்கள், முகவரி, சொத்து விவரங்கள் போன்றவற்றை புதிய மென்பொருள் மூலம் பதிவேற்றம் செய்தாலே பத்திரம் தானாக உருவாகும். ஆதார் மூலம் ஓடிபி சரிபார்ப்பு, விரல் ரேகைப் பதிவு ஆகியதும் வீட்டிலிருந்தே செய்ய முடியும். விரல் ரேகைப் பதிவு கருவிகள் சந்தையில் ரூ.1,500க்கு கிடைக்கின்றன.

செயல்முறை முழுவதையும் 10 நிமிடங்களில் செய்து முடித்து, பதிவு ஆவணத்தை உடனே பெற்றுக்கொள்ளலாம். இதன் மூலம் அலுவலகத்திற்குச் சென்று கூட்டத்தில் காத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. இதுவரை ஆவண நகலை ஆன்லைனில் பெற விண்ணப்பித்தால், சார் பதிவாளர் ஒப்புதல் அளித்த பின்னரே அது கிடைக்கும். இதற்கு 2 நாள் முதல் 1 வாரம் வரை ஆகி வந்தது.

இந்த சிக்கலை நீக்குவதற்காக “சிஸ்டம் ஜெனரேட்டட் சிக்னேச்சர்” அறிமுகம் செய்யப்படுகிறது. இதன்மூலம் பதிவு செய்யப்பட்ட அடுத்த சில நிமிடங்களிலேயே சான்றிட்ட நகலை பெறலாம். குடியிருப்பு உரிமையாளர்கள் சங்கங்களை பதிவு செய்ய தற்போது அலுவலகத்துக்கு நேரடியாக வர வேண்டியது கட்டாயமாக இருந்தது. இதற்கும் தீர்வு காணப்பட்டுள்ளது. புதிய மென்பொருள் மூலம் சங்க பதிவு, ஒப்புதல் போன்ற செயல்முறைகள் ஆன்லைனில் மேற்கொள்ளப்படும்.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் குடியிருப்புகளை வாங்குபவர்கள் இனி சார் பதிவாளர் அலுவலகம் செல்ல வேண்டிய அவசியமில்லை. வாரிய அலுவலகத்திலேயே பதிவு செய்து, பத்திர ஆவணங்களை உடனே பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்த அனைத்து சேவைகளும் இணைக்கப்பட்ட ‘ஸ்டார் 3.0’ திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்னும் சில நாட்களில் மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்க உள்ளார். தமிழக பதிவுத்துறையின் வரலாற்றிலேயே மிகப்பெரிய டிஜிட்டல் சீர்திருத்தமாக இது பார்க்கப்படுகிறது.