குஜராத் மாநிலம் சூரத் நகரில், ‘PKR Blogger’ என்ற பெயரில் சமூக ஊடகங்களில் பிரபலமான பிரின்ஸ் பட்டேல் (வயது 18) என்ற இளைஞர், அதிவேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டிச் சென்றபோது ஏற்பட்ட கோரமான சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். டீன் ஏஜ் பருவ இளைஞர்கள் மத்தியில் தனது பைக் சவாரி ‘ரீல்ஸ்’ மற்றும் அதிவேக சாகசப் பதிவுகளால் அறியப்பட்ட இவர், கேடிஎம் டியூக் மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்துள்ளார்.
View this post on Instagram
கிரேட் லைனர் பாலம் என்ற பன்மாடி மேம்பாலத்திலிருந்து சுமார் 140 கி.மீ வேகத்தில் இறங்கும்போது, மோட்டார் சைக்கிளின் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்ததாகச் சிசிடிவி காட்சிகள் காட்டுகின்றன. கீழே விழுந்த வேகத்தில் பிரின்ஸ் சாலையில் பலமுறை உருண்டதோடு, விபத்தின் தாக்கம் மிகக் கடுமையாக இருந்ததால், அவரது தலை துண்டிக்கப்பட்டு உடல் வேறாகவும் விழுந்தது.
ஆரம்பகட்ட போலீஸ் விசாரணையில், பிரின்ஸ் விபத்தின்போது தலைக்கவசம் அணியவில்லை எனத் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவுசெய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். பிரின்ஸ் பட்டேல் கடந்த செப்டம்பர் மாதத்தில் வாங்கிய அவரது கேடிஎம் டியூக் 390 மோட்டார் சைக்கிள் மீதான ஆர்வத்தை அவரது சமூக ஊடகப் பக்கங்கள் முழுவதும் பிரதிபலிக்கின்றன. பைக் சவாரியின் பாணியுடனான படங்களையும், காணொலிகளையும் அவர் வழக்கமாகப் பகிர்ந்தார்.
பாசத்தின் மிகுதியால், தனது கேடிஎம் பைக்கிற்கு ‘லைலா’ என்று பெயரிட்டு அழைத்துள்ளார். விபத்துக்குச் சில நாட்களுக்கு முன்னர், ‘மஜ்னு’ எனக் தன்னைக் குறிப்பிடும் அவர், மரணத்தால் பிரிந்தாலும் ‘லைலா’ மீதுள்ள அன்பை விவரிக்கக்கூடிய, பாலிவுட் பாணியிலான உருக்கமான காணொலி ஒன்றைப் பதிவேற்றி இருந்தார். குடிசையிலேயே வசித்துவரும் பிரின்ஸின் தாயார், பால் விற்றுத் தொழில் செய்துவரும் நிலையில், மகனை இழந்துள்ள இச்சோகச் சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேகம் பலருக்கு உற்சாகத்தை அளித்தாலும், பாதுகாப்பின்மை காரணமாக விபரீத விளைவுகளையும் ஏற்படுத்தும் என்ற உண்மையை இச்சம்பவம் மீண்டும் ஒருமுறை உணர்த்துகிறது.
