காலை எழுந்தவுடன் உடனடியாகச் செல்போனைப் பார்க்கும் பழக்கம், நமது உற்பத்தித் திறன் (Productivity), மன ஆரோக்கியம் (Mental Health) மற்றும் தூக்கச் சுழற்சி (Sleep Cycle) ஆகியவற்றை மெதுவாகப் பாதிக்கும் என்று டெல்லி ஏஐஐஎம்எஸ்-ஐச் சேர்ந்த நரம்பியல் நிபுணர் டாக்டர் பிரியங்கா ஷெராவத் (Dr. Priyanka Sehrawat) எச்சரித்துள்ளார். இது ஒரு தீங்கற்றப் பழக்கம்போல் தோன்றினாலும், இது உங்கள் ஆரோக்கியத்தைச் சத்தமின்றிப் பாதிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
காலை வேளையில் திரையைப் பார்ப்பதன் மூலம், “நாம் தேவையில்லாத பல தகவல்களை உள்வாங்கிக் கொள்கிறோம். இது அன்றைய தினத்தின் வேலைத் திறன், திட்டமிடல் மற்றும் இலக்குகளைப் பாதிக்கிறது.
இதனால், திறனானது குறைகிறது,” என்று டாக்டர் பிரியங்கா விளக்குகிறார். திரையில் தொடர்ந்து வெளிப்படுவதன் விளைவாக, மாலைக்குள் தலைவலி (Headaches), பதட்டம் (Anxiety) அதிகரிக்கிறது.
மேலும், தூக்கமின்மை (Sleep Deprivation) ஏற்பட்டு இரவு நேரத்திலும் திரையைப் பார்க்கும் பழக்கம் தொடர்கிறது. இந்தப் பழக்கத்தைக் கைவிட, அவர் காலை நேரத்தைத் திரை இல்லாத நேரமாக (Screen-free) அமைத்து, உடற்பயிற்சி மற்றும் பகல் வெளிச்சத்துடன் நாளைத் தொடங்குமாறும், இரவு படுப்பதற்கு முன் செல்போன் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.
