திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா பனமுகை கிராமத்தை சேர்ந்த மணிகண்டன்–வனிதா தம்பதியருக்கு பிரனிதா (11), டிக்சிதா (9), டில்சிதா (7) என்ற 3 மகள்கள் உள்ளனர். கடந்த 23 ஆம் தேதி காலை, வீட்டில் சமைக்கப்பட்ட வேர்க்கடலை சட்னியுடன் இட்லி சாப்பிட்டுள்ளனர். அன்றிரவு வனிதாவும் மூன்று மகள்களும் திடீரென வயிற்றுவலி, வாந்தி போன்ற உடல்நலக்குறைவால் அவதிப்பட்டனர். இதையடுத்து, மறுநாள் (24ம் தேதி) பிரம்மதேசம் அருகிலுள்ள தனியார் கிளினிக்கில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

ஆனால் டிக்சிதா மற்றும் டில்சிதா ஆகியோரின் உடல்நிலை மோசமடைந்ததால், வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். தொடர்ந்து பிரனிதாவும் 26ம் தேதி வேலூரிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மேலும் சிகிச்சை அளிக்கப்பட்டும், உடல்நிலை மேலும் மோசமடைந்த பிரனிதா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த திடீர் மரணம் குடும்பத்தாரையும், கிராம மக்களையும் பெரும் அதிர்ச்சியும் துயரமும் ஆழ்த்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் பிரம்மதேசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வேர்க்கடலை சட்னி தொடர்பான காரணங்களைத் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். மேலும் பள்ளிப்பருவ சிறுமி உயிரிழந்த  சம்பவம் அந்த பகுதியில் துயரச்சூழலை உருவாக்கியுள்ளது.