ஜார்க்கண்ட் மாநிலம் கோடெர்மாவில் உள்ள சதார் மருத்துவமனையில் நிகழ்ந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம், மருத்துவ அலட்சியத்தின் உச்சத்தை வெளிப்படுத்தியுள்ளது.
கிரிதி மாவட்டத்தைச் சேர்ந்த சஞ்சய் குமார் என்பவரின் மனைவி குஷ்பு குமாரிக்கு, ஜூலை 11, 2025 அன்று சதார் மருத்துவமனையில் டாக்டர் அப்துல் ரஹ்மான் என்பவர் சிசேரியன் அறுவை சிகிச்சை செய்தார். இந்தச் சிகிச்சைக்குப் பிறகு ஆரோக்கியமான குழந்தை பிறந்தது. மகிழ்ச்சியுடன் வீடு திரும்பிய குடும்பத்திற்கு, மூன்று மாதங்களுக்குப் பிறகு பேரதிர்ச்சி காத்திருந்தது.
குஷ்புவுக்குத் தாங்க முடியாத வயிற்று வலி ஏற்பட்டதையடுத்து, கயாவில் உள்ள மருத்துவமனையில் அவர் பரிசோதனை செய்துகொண்டார். அங்கு எடுக்கப்பட்ட அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் அறிக்கையில், அவரது வயிற்றில் ஒரு காஸ் (டெட்ராகன்) துணி விடப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுவே கடுமையான வலிக்குக் காரணம் என்றும், உடனடியாக அகற்றப்படாவிட்டால் உயிருக்கு ஆபத்து என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட சஞ்சய் குமாரின் குடும்பம், தங்கள் பண்ணை நிலத்தை விற்று, கடன் வாங்கியும் அக்டோபர் 17-ஆம் தேதி குஷ்புவுக்கு கயாவில் மறு அறுவை சிகிச்சை செய்து, துணியை அகற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இந்த அறுவை சிகிச்சை குஷ்புவின் உயிரைக் காப்பாற்றியிருந்தாலும், அவரது இனப்பெருக்க உறுப்புகள் பாதிக்கப்பட்டதால், அவர் மீண்டும் தாயாக முடியாது என்ற துயரச் செய்தியை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மருத்துவ அலட்சியத்தால் தாங்கள் கடனில் மூழ்கி, நிலத்தை இழந்து, குடும்பமே அழிவின் விளிம்பில் இருப்பதாக சஞ்சய் குமார் குற்றம் சாட்டியுள்ளார். வேலை இழந்த அவர், தற்போது நியாயம் கேட்டு கோடெர்மா மாவட்ட ஆட்சியர் ரிதுராஜ் அவர்களிடம் விண்ணப்பம் அளித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட குஷ்பு குமாரி, தன் துன்பத்திற்கும் அவமானத்திற்கும் நீதி கிடைக்க வேண்டும் என்றும், அலட்சியத்துடன் செயல்பட்ட மருத்துவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக, கோடெர்மா மாவட்ட காவல் ஆணையர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடமும் அவர் புகார் அளித்துள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டு குறித்து கருத்து தெரிவித்த சதார் மருத்துவமனையின் சிவில் சர்ஜன் டாக்டர் அனில் குமார், இதுவரை தங்களுக்கு எந்தப் புகாரும் வரவில்லை என்றும், அப்படி ஒரு விண்ணப்பம் வந்தால், முழுமையான விசாரணை நடத்தப்படும் என்றும், இது போன்ற சம்பவம் நடந்திருந்தால் அது மிகப்பெரிய அலட்சியம் என்றும் உறுதிபடக் கூறியுள்ளார்.
அலட்சியத்தால் ஒரு பெண்ணின் தாய்மை உரிமையே பறிக்கப்பட்ட இந்தச் சம்பவம், ஜார்க்கண்ட் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
