பாட்டாளி மக்கள் கட்சி கடலூர் மாவட்ட ஒருங்கிணைந்த பொதுக்குழு கூட்டம், பாமக நிறுவனர் தலைவர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நெய்வேலியில் நடைபெற்றது. இதில் அவர், அன்புமணி ராமதாஸ் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து அதிரடி பேச்சாற்றினார்.

கூட்டத்தில் பேசிய ராமதாஸ், “எனக்கு நடந்த கொடுமையை நீங்கள் எல்லோரும் அறிவீர்கள். என் உயிரைத் தவிர மற்ற அனைத்தையும் அவர் பறித்து விட்டார். 46 ஆண்டுகளாக 96 ஆயிரம் கிராமங்களுக்கு சென்று மக்களை சந்தித்து உழைத்து வளர்த்த கட்சியின் உரிமையை முழுவதும் கைப்பற்ற முயன்றுள்ளார். ஆனால் அந்த உரிமையை நான் எப்போதும் விட்டுக் கொடுக்க மாட்டேன்” என்றார்.

மேலும் அவர் தொடர்ந்து, “சுப்ரீம் கோர்ட் சென்றாலும், எந்த நீதிமன்றத்துக்கும் சென்றாலும் நான் ஜெயிப்பேன். ராமதாஸை தோற்கடிக்க யாராலும் முடியாது. என் வியர்வையும் உழைப்பையும் யாரும் திருட முடியாது. ஏமாற்றி, பொய் சொல்லி, தேர்தல் ஆணையத்தையே  ஏமாற்றிவிட்டார். கூட்டணியில் இருந்தபோது ஐந்து எம்.எல்.ஏ-களை மட்டுமே பெற்றோம். தனியாக நின்றபோது நான்கு எம்.எல்.ஏ-களை பெற்றோம். இதில் குறை எதுவாக இருந்தாலும் அது அன்புமணியின் செயல்தான்” என்று விமர்சித்தார்.

அவர் மேலும் தெரிவித்தது: “திருவேற்காட்டில் நடைபெற்ற பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனக்கு உதவியாக என் மூத்த மகள் காந்தியை செயல் தலைவராக நியமித்துள்ளேன். இனி ஏமாற்றம், துரோகம் எதுவும் நடக்காது. என் உரிமை பறிக்கப்படாது” என அவர் வலியுறுத்தினார். மேலும் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.