ஆந்திரப்பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில் பல நூற்றாண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வரும் பாரம்பரிய சடங்குகள், இன்றும் சில கிராமங்களில் தொடர்கின்றன. இதில் குறிப்பிடத்தக்க ஒன்று, பூஜைகள் மற்றும் திருமணத்திற்கு முன் ஆண்கள் பெண்கள் போலவும், பெண்கள் ஆண்கள் போலவும் உடையணியும் பாரம்பரியம். அதன்படி கொலுகுலா கிராமத்தில், மணமகன்–மணமகள் திருமணத்திற்கு ஒரு நாள் முன்பு உடைகளை மாற்றிக்கொண்டு தங்கள் இஷ்ட தெய்வத்தை வழிபடுவது வழக்கம். இந்நிலையில்,
மணமகன் பெண் வேடத்தில் திருமண ஊர்வலத்தை வழிநடத்தி, பின்னர் குடும்ப தெய்வத்தை வணங்குகிறார். பூஜை முடிந்ததும், இருவரும் மீண்டும் வழக்கமான மணமக்கள் உடைக்கு மாறி திருமணம் நடைபெறும். சமீபத்தில், கொலுகுலா கிராமத்தில் உள்ள பட்டுலா குலத்தைச் சேர்ந்த சிவ கங்குராஜு – நந்தினி தம்பதிகளின் திருமணத்தில் இந்த பாரம்பரியம் மீண்டும் கடைப்பிடிக்கப்பட்டது. மணமகன் பெண் வேடத்திலும், மணமகள் ஆண் வேடத்திலும் தோன்றி ஊர்வலத்தில் கலந்துகொண்டனர். அவர்களின் குடும்பத்தினர், இது பல தலைமுறைகளாகக் கடைப்பிடித்து வரும் வழக்கம் என்றும், நவீன காலத்திலும் அதை மரியாதையுடன் தொடர்கிறோம் என்றும் தெரிவித்தனர்.
பிரகாசம் மாவட்டத்தின் நாகுளுப்பலபாடு கிராமத்தில் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ‘அங்கம்மா தாலி ஜாதரா’ விழாவிலும் இதேபோன்ற மரபு காணப்படுகிறது. ஆண்கள் பெண்களாகவும் உடையணிந்து பூஜை செய்து தங்கள் வேண்டுதல்களை செலுத்துவது முக்கிய சடங்காகும். மூன்று நாட்கள் நடைபெறும் இந்த விழா ஆடம்பரமாகக் கொண்டாடப்படுகிறது. மேலும் பல நூற்றாண்டுகளாக தொடரும் இந்த பாரம்பரியங்கள், இன்றும் அந்தப் பகுதிகளில் கலாசார அடையாளமாக நிலைத்து வருகின்றன.
