மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தன்னுடைய மகன் சரியாக சாப்பிடாததால் ஒரு தந்தை நாய் பெல்ட் மற்றும் கம்பி உள்ளிட்டவைகளால் கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு காதல் விவகாரத்திற்கு பிறகு 27 வயது பெண் ஒருவருக்கும் அந்த நபருக்கும் திருமணம் நடைபெற்ற நிலையில் 2019 ஆம் ஆண்டு ஒரு மகன் பிறந்தார். தம்பதிகளுக்கு இடையே கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பிரச்சனை அதிகரித்ததால் மனைவியை கணவன் வீட்டை விட்டுவிட்டு வெளியே அனுப்பிய நிலையில் குழந்தையை தன்னுடன் வைத்துக்கொண்டுள்ளார்.

வாரத்திற்கு ஒருமுறை மட்டும் அந்த தாய் தன் மகனை பார்த்து வந்த நிலையில் தன் மகனுக்கு அவர் வீடியோ கால் செய்த போது ஆடையை கழற்றி தன் தந்தை கொடூரமாக அடித்ததை கூறியதோடு உடம்பில் உள்ள காயங்களையும் காட்டியுள்ளான். கடந்த 25ஆம் தேதி இந்த சம்பவம் நிகழ்ந்த நிலையில் உடனடியாக அந்த தாய் தன் மகனை அழைத்துக்கொண்டு காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்தார். மேலும் அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.