தெலுங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டம் கட்டமீதி கங்காரம் கிராமத்தைச் சேர்ந்த தம்பதி கஞ்சி மல்லம்மா – சாயப்பாவின் இளைய மகள் சிரிஷா (21) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் ஆறு மாதங்களுக்கு முன், சிரிஷாவின் திருமணம் நல்லமோணி கூடத்தைச் சேர்ந்த சிவலிங்கத்துடன் நடைபெற்றது. திருமணத்திற்குப் பின், சமைக்கும் திறன் குறைவாக உள்ளது என்பது உள்ளிட்ட காரணங்களால், மேலும் தன் கல்வித்தகுதியை விட குறைவாக படித்துள்ளார் என்ற காரணத்தையும்வைத்து, சிவலிங்கம் தனது மனைவியை அடிக்கடி கண்டித்தும், கொடுமைப்படுத்தியும் வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த 25ஆம் தேதி இருவருக்கும் இடையே கடும் தகராறு ஏற்பட்டது. பின்னர் சிவலிங்கம், சிரிஷாவை அவரது பெற்றோர் வீட்டில் இறக்கிவிட்டு சென்றுவிட்டார். மகளை ஆறுதல் கூறிய பெற்றோர், பிரச்சினை சரியாகிவிடும் என நம்பிக்கை அளித்துள்ளனர்.
கணவரைத் தொடர்புகொண்டு பேச முயன்ற சிரிஷாவிடம், “நீ எனக்கு தேவையில்லை” என்று கடுமையாக திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனஉளைச்சலில் ஆழ்ந்த அவர், வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் கிராமத்தினரிடையே துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
