சென்னை எண்ணூர் பகுதியில் வசித்து வந்த கோகுல் பிரசாத் (31) ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கோகுல் பிரசாத்தின் தந்தை ‘போட்டோ மணி’ கடந்த ஆண்டு உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அதற்கு முன்பு, தந்தையின் மருத்துவச் செலவுகளைச் சந்திக்க அவர் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் பெருமளவு பணம் கடன் பெற்றிருந்ததாகத் தெரிய வருகிறது. இதனுடன், தற்போது தாயின் உடல்நலப் பிரச்சனைகள் காரணமாக கூடுதலாகவும் கடன் வாங்கியிருப்பது குறிப்பிடப்படுகிறது.
கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பிக்கேட்டு அடிக்கடி அழுத்தம் கொடுத்ததாலேயே கோகுல் பிரசாத் மன உளைச்சலில் இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில, அவர் தனது நண்பருடன் செல்பேசியில் பேசிக்கொண்டபடி எர்ணாவூர் கேட் அருகே சென்றுள்ளார். அப்போது, “ரெயில் வருகிறது… நான் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்கிறேன்” என்று நண்பரிடம் கூறியவாறே வேகமாக வந்த ரெயில் முன் பாய்ந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதில் ரெயிலில் மோதியதால் கோகுல் பிரசாத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிகழ்வு எண்ணூர் பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
