தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே காப்புலிங்கம்பட்டியைச் சேர்ந்த கோமு (58) என்பவர், கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சுமார் 18 ஆண்டுகள் சிறையில் இருந்து சமீபத்தில் விடுதலையானார். வீட்டுக்கு திரும்பிய அவர் மீண்டும் விவசாயப் பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

இதற்கிடையில், கோமுவுக்கும் அவரது மனைவி தங்கத்தாய்க்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் தங்கத்தாய் கணவரை விட்டு பிரிந்து மகன் மாடசாமியின் வீட்டில் தங்கினார். இதற்கு தங்கத்தாயின் சகோதரரான முருகன் (56) காரணம் என எண்ணிய கோமு, அவர்மீது ஆத்திரம் கொண்டு பழிவாங்க தீர்மானித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த இரவு, முருகனும் அவரது மைத்துனரான மாரியம்மாள் கணவர் மந்திரமும் (55) மதுக்கடைக்கு சென்றிருந்தனர். அப்போது அங்கு வந்த கோமு, அரிவாளுடன் திடீரென தாக்குதல் நடத்தினார். முதலில் முருகனை வெட்டிய அவர், தடுக்க முயன்ற மந்திரத்தையும் சரமாரியாக வெட்டினார்.

காயமடைந்த இருவரும்  அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு முருகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மந்திரம் நெல்லை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், நேற்று காலை உயிரிழந்தார்.

அரிவாளுடன் உள்ளே புகுந்து கொலை செய்யும் காட்சிகள் டாஸ்மாக் கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. இக்காட்சி சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொலையான முருகனுக்கு மனைவி வெள்ளத்துரைச்சி, மகன் ராமமூர்த்தி (கோவை போலீஸ்காரர்) உள்ளனர். ராமமூர்த்தியின் மனைவி கோவையில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றுகிறார். மந்திரத்துக்கு மனைவி மாரியம்மாள், மகள்கள் மல்லிகா, காப்புதுரைச்சி மற்றும் மகன் மகேஷ் உள்ளனர்.

இரட்டைக்கொலை குறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான கோமுவை வலைவீசி தேடி வருகின்றனர்.