கர்நாடக மாநிலம் ஹிரேமுலங்கி கிராமத்தில் இடம்பெற்ற கொடூரச் சம்பவம் ஒன்று அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அங்கு வசிக்கும் அஸ்வினி ஹலகட்டி (30), மூன்று பெண் குழந்தைகளின் தாயாக உள்ளார். ஆண் குழந்தை வேண்டுமெனும் விருப்பத்தில் சமீபத்தில் நான்காவது முறையாக கர்ப்பமான அவர், 23-ந்தேதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மீண்டும் பெண் குழந்தைக்குப் பிறந்தார்.
இதனால் மனஉளைச்சலுக்கு உள்ளான அஸ்வினி, மறுநாள் குழந்தையுடன் வீட்டுக்கு திரும்பினார். குடும்பத்தினர் தெரிவிக்கையில, சம்பவத்தன்று காலை அஸ்வினியின் தாய் பச்சிளம் குழந்தையை தூங்கவிட்டுவிட்டு அருகில் உள்ள கடைக்கு சென்றிருந்தார். இந்த நேரத்தில், “மீண்டும் பெண் குழந்தை பிறந்துவிட்டதே” என்ற வேதனையில் மூழ்கிய அஸ்வினி, தனது பச்சிளம் மகளின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
சில நேரம் கழித்து வீடு திரும்பிய அஸ்வினியின் தாய், குழந்தை மூச்சுவிடவில்லை என அஸ்வினி அழுது காட்டியதால் உடனடியாக ராமதுர்கா அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார். பரிசோதித்த மருத்துவர், குழந்தை ஏற்கனவே உயிரிழந்துள்ளதாகவும், கழுத்து நெரிக்கப்பட்டதில் மூச்சுத்திணறி இறந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து மருத்துவர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். அஸ்வினி மற்றும் அவரது தாயிடம் விசாரணை மேற்கொண்டபோது, 4-வது முறையும் பெண் குழந்தை பிறந்ததால் மனஉளைச்சலில் இருந்த அஸ்வினியே குழந்தையை கொன்றது வெளிச்சத்துக்கு வந்தது.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து அஸ்வினியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
