குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் ஹித்தேஷ் அசோடியா என்ற கணவன், தனது மனைவி ஸ்னேஹாபென்னை (Snehaben) கொன்றுவிட்டு, அவர் ‘பானி பூரி’ சாப்பிடச் சென்று காணாமல் போனதாகக் கூறிப் போலீஸிடம் நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலை நசுங்கிய நிலையில் மீட்கப்பட்ட சடலம், ஸ்னேஹாபென் என அடையாளம் காணப்பட்ட சில மணி நேரங்களிலேயே போலீஸார் ஹித்தேஷை சந்தேகித்தனர்.
திருமணமாகி மூன்று ஆண்டுகளான இந்தத் தம்பதியினர், ஆரம்பம் முதலே அடிக்கடி சண்டையிட்டுள்ளனர். மனைவி ஸ்னேஹாபென், தன் கணவன் ஹித்தேஷை தொடர்ந்து சந்தேகப்பட்டு, வேலை செய்யும் இடத்திற்கே அடிக்கடி போன் செய்து வாக்குவாதம் செய்துள்ளார்.
இதனால் மனச்சோர்வு அடைந்த கணவன், சனிக்கிழமை மாலை மனைவியுடன் சண்டையிட்ட பிறகு, தனது பட்டறையில் இருந்து இரும்பு ராடுடன் (Iron Rod) வந்துள்ளார்.
பின்னர், மனைவியை இருசக்கர வாகனத்தில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்திற்குக் கூட்டிச் சென்று, மறைத்து வைத்திருந்த இரும்பு ராடால் தாக்கி கொலை செய்துள்ளார்.
இவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு மகன் உள்ளான். ஆரம்பத்தில் போலீஸாரை தவறாக வழிநடத்த முயன்ற ஹித்தேஷ், பிறகு உண்மையை ஒப்புக்கொண்டதால் கைது செய்யப்பட்டார்.
