திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரைச் சேர்ந்த 22 வயது வைஷ்ணவி, தனது தாய் மாமனைத் திருமணம் செய்து இரண்டு குழந்தைகளைப் பெற்றார்.

சில மாதங்களுக்கு முன், ஊர்த் திருவிழாவில் திண்டுக்கல்லைச் சேர்ந்த சூர்யா (24) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இவருக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்களின் நட்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

தொடர்ந்து செல்போனில் பேசி வந்த இவர்களை, இரு வீட்டாரும் கண்டித்தும் கேட்கவில்லை. இதனால், இரண்டு பேரும் தங்கள் குடும்பத்தையும், குழந்தைகளையும் விட்டுவிட்டு திருப்பூரில் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இதுகுறித்து இரு குடும்பத்தாரும் வேடசந்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில், காவல்துறையினர் திருப்பூரில் இருந்த கள்ளக்காதல் ஜோடியை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு வைஷ்ணவி மற்றும் சூர்யாவின் குடும்பத்தினர் வந்து, குழந்தைகளுக்காக மீண்டும் சேர்ந்து வாழுமாறு வலியுறுத்தினர். ஆனால், வைஷ்ணவி தனது கணவருடன் செல்ல விருப்பம் இல்லை என்றும், சூர்யாவுடன் செல்லவே விரும்புவதாகவும் கூறிவிட்டார்.

இதையடுத்து, காவல்துறையினர் அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். குடும்ப நலப் பிரச்சினைகளில் குழந்தைகளை மறந்து, கள்ளக்காதல் ஜோடியை காவல்துறையினர் சேர்த்து வைக்காமல் அனுப்பி வைத்தது இரு குடும்பத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக, அந்த நான்கு குழந்தைகளும் தற்போது ஆதரவின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.