நடிகர் தனுஷ், தான் நடிக்கும் பெரும்பாலான படங்களில் காதல் தோல்வியடைந்த (Heartbroken) கதாபாத்திரங்களிலேயே ஏன் நடிக்கிறார் என்ற ரகசியத்தை, அவரது இந்திப் பட இயக்குநர் ஆனந்த் எல். ராய் (Aanand L. Rai) வெளிப்படுத்தியுள்ளார்.
‘காதல் கொண்டேன்’, ‘புதுப்பேட்டை’, ‘அசுரன்’ போன்ற படங்களின் மூலம் தன் நடிப்பால் தனி இடத்தைப் பிடித்த தனுஷ், இயக்குநர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் எனப் பன்முகத்தன்மையுடன் திரையுலகில் கலக்கி வருகிறார்.
தனுஷும், ஆனந்த் எல். ராயும் இணைந்து கொடுத்த ‘ராஞ்சனா’, ‘அட்ராங்கி ரே’ போன்ற படங்களில் கூட, தனுஷின் கதாபாத்திரம் காதல் தோல்வியை எதிர்கொள்ளும் வகையிலேயே அமைந்திருந்தது.
இப்போது வெளியாகவிருக்கும் அவர்களின் மூன்றாவது படமான ‘தேரே இஷ்க் மே’ திரைப்படமும் அதேபோல் காதல் தோல்விக் கதையாக உள்ளதால், தனுஷ் நேரடியாக இயக்குநரிடம், “ஏன் எப்போதும் என்னை காதல் தோல்வி கதாபாத்திரங்களிலேயே நடிக்க வைக்கிறீர்கள்?” என்று கேட்டுள்ளார்.
அதற்கு ஆனந்த் எல். ராய், “உன் முகத்திலேயே ஒரு ‘பிரேக்கப் மேன் ஃபீல்’ தெரிகிறது” என்று வேடிக்கையாகப் பதில் அளித்துள்ளார். இதைக் கேட்டவுடன், வீட்டுக்குச் சென்று கண்ணாடியில் பார்த்து குழம்பிப் போனதாகவும், பின்னர் அதை பாராட்டாக எடுத்துக்கொண்டதாகவும் தனுஷ் புன்னகையுடன் கூறியுள்ளார்.
