பீகாரைச் சேர்ந்த பத்திரிகையாளர் கன்னையா பெலாரி என்பவர், யூடியூப் சேனல் ஒன்றில் நடந்த விவாதத்தின்போது, ஓரினச் சேர்க்கை திருமணங்கள் மற்றும் ஓரின உறவுகள் குறித்துப் பேசிய கருத்துகள் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன. சமீபத்தில், “திருமணம் ஆன மகள்கள் பெற்றோரின் வீட்டிற்குச் சிறப்பு நிகழ்வுகளின்போது மட்டுமே வரவேண்டும், தந்தையின் குடும்ப விவகாரங்களில் தலையிடக் கூடாது” என்று இவர் பேசியதற்கு லாலு யாதவின் மகள் ரோகிணி ஆச்சார்யா உட்படப் பலரும் கடுமையாக விமர்சித்திருந்த நிலையில், தற்போது பெலாரி புதிய அதிர்ச்சிகரமான கருத்தைக் கூறியுள்ளார்.
“Earthquake happens because of Gay people”
~ Kanhaiya Bhelari, Congressi journalist pic.twitter.com/bCgbNOPZPC
— Ankur Singh (@iAnkurSingh) November 22, 2025
ஆண்கள், ஆண்களைத் திருமணம் செய்வதும், பெண்கள், பெண்களைத் திருமணம் செய்வதும் தவறு என்றும், வயது வந்தோர் விரும்பி வைத்துக்கொள்ளும் இந்த உறவுகள்தான் நிலநடுக்கம் ஏற்படக் காரணம் என்றும் அவர் விளக்கம் அளித்தது அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. நிலநடுக்கம் என்பது இயற்கையான புவியியல் செயல்பாடுகளால் தான் ஏற்படுகிறது என்று அறிவியல் உண்மைகள் தெளிவாகப் பத்திரிகையாளரால் எடுத்துக் கூறப்பட்டபோதும், கன்னையா பெலாரி அதை ஏற்க மறுத்துள்ளார்.
சமூகம் நவீனமயமாவதால் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அர்த்தமில்லை என்று அவர் பிடிவாதமாகப் பேசியுள்ளார். அறிவியல் பூர்வமான காரணங்களைக் கருத்தில் கொள்ள மறுத்த அவரது இந்த அணுகுமுறை, பார்ப்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதுடன், சமூக வலைதளங்களில் ஓரினச் சேர்க்கை உறவுகள் மற்றும் மடமையான கருத்துகள் குறித்து கடும் விவாதத்தைத் தூண்டியுள்ளது.
