மது பழக்கத்தால் அடிக்கடி துன்புறுத்திய கணவனை, அவரது இரு மனைவிகள் சேர்ந்து பெட்ரோல் ஊற்றி தீவைத்து கொலை செய்த அதிர்ச்சிகரமான சம்பவம் நிஜாமாபாத் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
அங்கு வசித்து வந்த கூலி தொழிலாளி மலவத் மோகன் (42) என்பவருக்கு கவிதா, சங்கீதா என இரு மனைவிகள் உள்ளனர். தினமும் மது அருந்தி விட்டு இருவரையும் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
நேற்றுமுன்தினம் இரவு குடித்துவிட்டு வந்த மோகன், இருவரையும் தாக்கி வீட்டுக்குள் பூட்டிவிட்டு சென்றதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அக்கம்பக்கத்தினர் உதவியுடன் இருவரும் மீட்கப்பட்டனர்.
இதனால் அதிருப்தியடைந்த கவிதா மற்றும் சங்கீதா, கணவனை தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர். திட்டமிட்டு காலையிலேயே பெட்ரோல் வாங்கி வைத்தனர்.
அதன்படி, இரவு மது அருந்தி விட்டு வீடு திரும்பிய மோகன் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது, அவர்மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக கூறப்படுகிறது. இதில் மோகன் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள அவரது இரு மனைவிகளையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
