சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வரும் ஒரு சிசிடிவி காணொளி, வாழ்க்கையில் விரக்தியடைந்து தற்கொலை செய்ய முயன்ற ஒரு இளம் பெண்ணை கடைசி நேரத்தில் இரண்டு இளைஞர்கள் துணிச்சலுடன் காப்பாற்றிய நெகிழ்ச்சியான சம்பவத்தைக் காட்டுகிறது. இந்தச் சம்பவம் ஒரு ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் மாடியில் நடைபெற்றுள்ளது. வெள்ளை நிற மேலாடை அணிந்திருந்த அந்தப் பெண், காம்ப்ளக்ஸின் கைப்பிடிச் சுவரில் ஏறி கீழே குதிக்க முயன்றபோது, அருகில் இருந்த இளைஞர் ஒருவர் அவரது நோக்கத்தைப் புரிந்துகொண்டு உடனடியாகச் செயல்பட்டார்.
View this post on Instagram
அவர் மின்னல் வேகத்தில் அந்தப் பெண்ணைப் பிடித்து தரையில் இழுத்துப் போட்டதால், அவரது முதல் முயற்சி தோல்வியடைந்தது. தற்கொலை செய்துகொள்வதில் பிடிவாதமாக இருந்த அந்தப் பெண், அந்த இளைஞர் அவரைச் சமாதானப்படுத்த முயன்றபோதும், மீண்டும் ஒரு முறை சுவரில் ஏறி கீழே குதித்தார். அப்போது சரியான நேரத்தில் அங்கே வந்த இரண்டாவது நபர் உதவியுடன், இருவரும் துணிச்சலாகச் செயல்பட்டுச் சுவரில் தொங்கிக்கொண்டிருந்த அந்தப் பெண்ணை மீண்டும் மேலே இழுத்து காப்பாற்றினர்.
சிறிது நேரத்தில் மற்றவர்களும் அங்கு வர, அனைவரும் சேர்ந்து அந்தப் பெண்ணை சமாதானப்படுத்திப் பாதுகாப்பாக அங்கிருந்து அழைத்துச் சென்றனர். இந்தச் சம்பவம் எப்போது, எங்கு நடந்தது என்று உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், பெண்ணின் உயிரைக் காப்பாற்றிய அந்த இளைஞர்களின் துணிச்சலான மற்றும் உதவி செய்யும் மனப்பான்மையைச் சமூக வலைதளங்களில் பலரும் போற்றிப் பாராட்டி வருகின்றனர்.
