கள்ளக்காதல் தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினையால் பெண்ணை கொலை செய்து ஆற்றில் வீசிய தொழிலாளி பிரபீஷுக்கு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ளது.
கேரள மாநிலம் மலப்புரம், நிலம்பூரை சேர்ந்த பிரபீஷ் (37), கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார். இந்த நிலையில் பாலக்காட்டில் இரண்டு குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வந்த அனிதா (32) என்பவருடன் பிரபீஷ் கள்ளத் தொடர்பில் இருந்தார். அடிக்கடி அவரது வீட்டுக்கு சென்று உல்லாசமாக இருந்த நிலையில் அனிதா கர்ப்பமானார். இதையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அவர் பிரபீஷை வற்புறுத்தினார்.
இதனால் அதிருப்தியடைந்த பிரபீஷ், தனது மற்றொரு கள்ளத் தொடர்பான ரஜனி (38) உடன் சேர்ந்து அனிதாவை கொலை செய்ய திட்டமிட்டார். திட்டத்தின்படி 2021 ஜூலை 9-ஆம் தேதி பிரபீஷ், அனிதாவை ரஜனியின் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அங்கு ரஜனி அனிதாவின் வாயை பொத்திக்கொள்ள பிரபீஷ் கயிற்றால் அவரது கழுத்தை இறுக்கினார். இதில் அனிதா மயக்கமடைந்தார். அவர் இறந்துவிட்டதாக நினைத்த இருவரும் உடலை அருகிலிருந்த ஆற்றில் வீசினர்.
ஆற்றில் வீசப்பட்ட அனிதா தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்தது. சம்பவத்தையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் பிரபீஷ்க்கு நீதிமன்றம் நேற்று தூக்கு தண்டனை வழங்கியது. இரண்டாவது குற்றவாளி ரஜனி தற்போது ஒடிசா சிறையில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இருப்பதால், அவருக்கான தண்டனை பின்னர் அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
