அதிமுக முன்னாள் எம்எல்ஏ சுதர்சனம் கொலை வழக்கில் பவாரியா கும்பலை சேர்ந்த மூன்று பேர் கொள்ளையர்கள் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. தமிழகத்தில் கடந்த 1995ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை பவாரியா கொள்ளை கும்பல் மிகவும் அட்டூழியம் செய்தது. இவர்கள் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதியின் அப்போதைய அதிமுக எம்எல்ஏவாக இருந்த சுதர்சனம் உட்பட 13 பேரை கொலை செய்து கொள்ளை கும்பத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்த கொள்ளை கும்பலை சுட்டு பிடிக்க உத்தரவிட்ட நிலையில் அப்போதைய ஐஜி ஜாங்கிட் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் இருந்த 13 கொள்ளையர்கள் பிடிக்கப்பட்டதோடு இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இவர்களில் நான்கு பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் பின்னர் ஆயுள் தண்டனையாக அது குறைக்கப்பட்டது. இதில் இருவர் சிறையில் உடல் நலக்குறைவால் இறந்துவிட்ட நிலையில் 9 பேர் ஜாமினில் வெளியே சென்றனர். இந்த நிலையில் சுதர்சனம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அசோக், ராகேஷ் மற்றும் ஜெகதீஷ் உட்பட மூன்று பேரை சென்னை அமர்வு நீதிமன்றம் குற்றவாளி என தீர்ப்பு வழங்கிய நிலையில் தற்போது அவர்களுக்கான தண்டனை வெளிவந்துள்ளது. மேலும் அதன்படி நாட்டையே உலுக்கிய இந்த கொலை வழக்கில் 20 வருடங்களுக்கு பிறகு இவர்கள் மூவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.