தென்காசி மாவட்டம், கடையநல்லூர் வட்டம், இடைக்கால் கிராமம், திருமங்கலம் – கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று (நவ. 24) காலை சுமார் 11 மணியளவில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்குநேர் மோதிக்கொண்ட துயரமான விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களில் ஐந்து பெண்கள் மற்றும் ஓர் ஆண் அடங்குவர். இந்தத் துயரச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தலா மூன்று லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்குத் தலா ஒரு லட்சம் ரூபாயும், இலேசான காயமடைந்தவர்களுக்குத் தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.

மேலும், விபத்தில் காயமடைந்து தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 56 நபர்களுக்குச் சிறப்புச் சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.