கான்பூரில்  உள்ள ஒரு நகைக்கடையில் சமீபத்தில் நடந்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அபிஷேக் யாதவ் (22 வயது) என்ற பாண் கடைக்காரர், தனது மனைவிக்கு ஆச்சரியமான பரிசாக தங்கச் சங்கிலி வாங்க, இரண்டு பெரிய சாக்கு மூட்டைகளில் நாணயங்களை எடுத்து வந்து நகைக்கடைக்காரரைக் திகைக்க வைத்தார்.

ஓராண்டு திருமண வாழ்க்கையைப் பூர்த்தி செய்த அபிஷேக், தனது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களில் பெரும்பாலோர் தரும் ரூ. 10 நாணயங்களை நோட்டுகளாக மாற்றாமல், அதை அப்படியே ஓராண்டாகச் சேமித்து வந்துள்ளார். அவர் மனைவி பெற்றோரின் வீட்டிற்குச் சென்றிருந்த நிலையில், அதைச் சரியான நேரமாகப் பயன்படுத்திக்கொண்டு நவம்பர் 1 அன்று அந்தக் கடைக்குச் சென்றுள்ளார்.

அபிஷேக் கொண்டு வந்த இரண்டு சாக்கு மூட்டைகளிலும் எண்ணியபோது, மொத்தம் 5,290 நாணயங்கள் இருந்துள்ளன. அதன் மதிப்பு ரூ. 1.05 லட்சம். அவர் தேர்வு செய்த தங்கச் சங்கிலியின் விலை ரூ. 1.25 லட்சம் ஆகும். மீதித் தொகையைத் தவணைகளில் செலுத்தலாம் என்று நகைக்கடை உரிமையாளர் மகேஷ் வர்மா கூறியதையடுத்து, அபிஷேக் அந்தச் சங்கிலியை ஆர்டர் செய்தார்.

இந்தக் நாணயங்களை எண்ணுவதற்கே இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகியுள்ளது. தான் இவ்வளவு பெரிய பரிசை வாங்க முடியும் என்று கற்பனை செய்யவே இல்லை என்று அபிஷேக் கூறியுள்ளார். அவரது மனைவியின் மீதான உண்மையான அன்பையும் விடாமுயற்சியையும் பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.