கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டத்தில், சாந்தாபாய் என்ற பெண், தனது கள்ளக்காதலுக்குத் தடையாக இருந்த கணவர் பீரப்பாவை, கூலிப்படையை ஏவிக் கொலை செய்துவிட்டு, கடந்த 7 ஆண்டுகளாக அவர் ‘மாரடைப்பால் இறந்துவிட்டதாக’க் கூறி நாடகமாடி வந்துள்ளார்.

சாந்தாபாய் அதே கிராமத்தைச் சேர்ந்த ஒருவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தது கணவர் பீரப்பாவிற்குத் தெரிய வந்து அவர் கண்டித்ததால், ஆத்திரத்தில் இந்தக் கொலையைச் செய்துள்ளார்.

கொலைக்குப் பிறகு, சாந்தாபாய் கூலிப்படையினருக்குப் பணம் கொடுக்காமல் காலம் தாழ்த்தியுள்ளார். இதனால், அவர்கள் சாந்தாபாயிடம் பணத்தைக் கேட்டுச் செல்போனில் பேசிய ஆடியோ பதிவுகளை சிலர் கைப்பற்றிச் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர்.

அந்த ஆடியோக்கள் வைரலானதைத் தொடர்ந்து, பீரப்பாவின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் சாந்தாபாயிடம் விசாரித்தபோது, கூலிப்படையை ஏவிக் கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து, சாந்தாபாய் மற்றும் மகேஷ், சுரேஷ், சித்து, சங்கர் ஆகிய 4 கூலிப்படையினர் உட்பட மொத்தம் 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கொலை நடந்து 7 ஆண்டுகளுக்குப் பிறகு உண்மை வெளிவந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.