கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கோந்துருத்து பகுதியைச் சேர்ந்த ஜார்ஜ் (வயது 61) என்பவர் விபசாரப் பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்து, பின்னர் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் அப்பெண்ணை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டின் சுவரில் சாய்ந்தபடி தூங்கிக்கொண்டிருந்த ஜார்ஜ் அருகில் கிடந்த சாக்கு மூட்டையை துப்புரவு பணியாளர்கள் பிரித்து பார்த்தபோதுதான் உள்ளே பெண் சடலம் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து விரைந்து வந்த எர்ணாகுளம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்தோஷ் தலைமையிலான போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக எர்ணாகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து, ஜார்ஜை எழுப்பி விசாரித்தபோது அவர் முன்னுக்கு பின் முரணாகப் பதிலளித்துள்ளார். சந்தேகமடைந்த போலீசார் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டதில், அவர் அந்தப் பெண்ணை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். தனது மனைவி, மகள், மகன் உள்ள நிலையில், மகன் லண்டனிலும், மகள் பாலாவிலும் வசித்து வருவதாகவும், சம்பவத்தன்று மனைவியை மகளின் வீட்டில் விட்டுவிட்டு தான் மட்டும் தனியாக வீடு திரும்பியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

வீடு திரும்பும் வழியில் விபசாரத்தில் ஈடுபடும் ஒரு பெண்ணைச் சந்தித்த ஜார்ஜ், அவருடன் உல்லாசமாக இருக்க விரும்பி வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். இருவரும் மது அருந்திய நிலையில் உல்லாசமாக இருந்த பின்னர், அப்பெண்ணுக்கு பணம் கொடுப்பது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஜார்ஜ், அங்கிருந்த இரும்பு கம்பியால் அப்பெண்ணை கடுமையாக தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார்.

கொலைக்குப் பின், சடலத்தை அப்புறப்படுத்த ஜார்ஜ் திட்டமிட்டுள்ளார். இதற்காக, அக்கம்பக்கத்தினரிடம் தனது நாய் இறந்துவிட்டதாகவும், அதன் உடலை அப்புறப்படுத்த சாக்கு மூட்டை தருமாறும் கேட்டுள்ளார். ஆனால், அக்கம்பக்கத்தினரிடமிருந்து மூட்டை கிடைக்காததால், கடையில் ஒரு சாக்கு மூட்டையை வாங்கி வந்துள்ளார். அதில் அந்த பெண்ணின் உடலைக் கட்டி வெளியே தூக்கிச் சென்று வீச முயற்சித்துள்ளார்.

ஆனால், குடிபோதையில் இருந்ததாலும், சடலத்தை வீசுவதற்கு சிரமப்பட்டதாலும், அவரால் உடனடியாக அதை செய்ய முடியவில்லை. எனவே, அந்த சாக்கு மூட்டையை வீட்டின் வெளியே போட்டுவிட்டு, அருகிலேயே சுவரில் சாய்ந்தபடி தூங்கிவிட்டார். அதிகாலையில் துப்புரவு பணியாளர்கள் வந்து சாக்கு மூட்டையைப் பிரித்துப் பார்த்தபோதுதான் இந்த கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. ஜார்ஜை கைது செய்த போலீசார், கொலை செய்யப்பட்ட அந்தப் பெண் யார் என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.