திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த இடையான்குளத்தூரைச் சேர்ந்த லாரி டிரைவர் விஜய் (27), ஐந்து ஆண்டுகளுக்கு முன் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட ஷர்மிளா என்பவருடன் வசித்து வந்தார்.

இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த சில நாட்களாக மனைவி ஷர்மிளாவின் நடத்தையில் விஜய்க்கு சந்தேகம் ஏற்பட்டதால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்தச் சூழலில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு விஜய் அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாகக் கிடந்தார்.

இதுகுறித்துச் சேத்துப்பட்டு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, ஷர்மிளா மற்றும் அவரது தாய் ராணி பாத்திமா ஆகியோரிடம் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தினர். அதில், இருவரும் சேர்ந்து விஜய்யை கொலை செய்தது அம்பலமானது.

காவல்துறையினரிடம் ஷர்மிளா அளித்த வாக்குமூலத்தில், அரசம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஒருவருடன் தனக்குப் பழக்கம் ஏற்பட்டதாகவும், அவருடன் பல இடங்களில் ‘ரீல்ஸ்’ மற்றும் புகைப்படங்கள் எடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். இதை அறிந்த கணவர் விஜய் கண்டித்ததால் தகராறு அதிகரித்தது.

கடந்த 17-ஆம் தேதி மீண்டும் தகராறு ஏற்பட்டபோது, ஆத்திரமடைந்த தானும், தனது தாயார் ராணி பாத்திமாவும் சேர்ந்து விஜய்யை உருட்டுக்கட்டை மற்றும் இரும்பு கம்பியால் தாக்கியதில், அவர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார் என்றும் ஷர்மிளா ஒப்புக்கொண்டுள்ளார். பின்னர், இருவரும் விஜய்யை தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டது போல் கழுத்தில் கயிற்றைக் கட்டி ஜன்னலில் தொங்கவிட்டுச் சென்றது தெரியவந்தது.

இந்தக் கொடூரச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஷர்மிளா மற்றும் அவரது தாயார் ராணி பாத்திமா ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர்.