திருமணமாகி சட்டப்பூர்வமாக பந்தத்தில் உள்ள ஒரு பெண், திருமண வாக்குறுதியின் பேரில் வேறொரு ஆணுடன் பாலியல் உறவு வைத்துக்கொள்வது கற்பழிப்பு (பலாத்காரம்) ஆகாது என்று பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.

பஞ்சாப்பில் நடந்த ஒரு வழக்கில், திருமணமான பெண்ணுடன் பாலியல் உறவு வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஒருவருக்கு 9 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்தத் தண்டனையை ரத்து செய்து தீர்ப்பளித்த நீதிபதி ஷாலினி சிங் நாக்பால், இதுதொடர்பான முதல் தகவல் அறிக்கையையும் (FIR) ரத்து செய்ய உத்தரவிட்டார்.

நீதிபதி தனது தீர்ப்பில், “சட்டப்பூர்வமாகத் திருமணமான ஒரு பெண்ணை, திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் உறவுக்கு உடன்பட வைத்தார்கள் என்பது கற்பனைக்கு எட்டாதது. ஏனெனில், இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண், தனது கணவர் மற்றும் குடும்பத்தினருடன் ஒரே வீட்டில் வசித்தபடியே, குற்றம் சாட்டப்பட்ட நபருடன் ஓராண்டுக்கும் மேலாகப் பாலியல் உறவில் இருந்துள்ளார்.

இது முற்றிலும் இருவரின் சம்மதத்துடன் நடந்த செயல். இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 90-ன்படி, இது தவறான புரிதலின் அடிப்படையில் இந்த உறவு ஏற்படவில்லை.

இது ஒழுக்கக்கேடான, தார்மீகமற்ற செயலாகக் கருதலாமே தவிர, பலாத்காரம் என்ற குற்றச் செயலாகாது.

திருமண பந்தத்தை அவமதிக்கும் பொறுப்பற்ற செயலாக மட்டுமே இதைக் கருத முடியும்” என்று திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.