நாட்டில் சொத்துத் தகராறுகள், குறிப்பாகப் பெண்களின் தனிப்பட்ட ஆபரணங்கள் மீதான வாரிசுரிமைச் சிக்கல்கள் அடிக்கடி நீதிமன்றங்களில் எழுகின்றன. மாமியாரின் மறைவுக்குப் பின், அந்த நகைகள் மருமகளுக்கா? அல்லது மகளுக்கா? என்பதில் குடும்பங்களுக்குள் குழப்பம் நிலவுவது வாடிக்கை. மரணம் வரை யார் நம்பிக்கைக்குரியவராக இருந்தாரோ, அவருக்கே நகைகள் முழுமையாகச் சென்றுவிடும் என்று பலர் தவறாக நினைக்கின்றனர்.
ஆனால், இந்த விவகாரத்தில் தனிநபர் நம்பிக்கைகளைவிட சட்ட விதிகளே இறுதி உரிமையை முடிவு செய்கின்றன. மறைந்த மாமியார் தன் வாழ்நாளில் உயில் எழுதி வைத்திருந்தால், அதில் யாருடைய பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதோ, அவர்களே அந்த நகைகளுக்கு முழு உரிமையாளர் ஆவார்கள். அதில், மகள், மருமகள் என்று எந்த வேறுபாடும் இல்லை. உயிலில் முறையான வாரிசுதாரர் பெயர் இருந்தால், அது சட்டப்படி மிகவும் வலுவான ஆவணமாகக் கருதப்பட்டு, எந்தச் சச்சரவுக்கும் இடமளிக்காமல் நகைகள் நேரடியாகப் போய்ச் சேரும்.
மாமியார் உயில் எதுவும் எழுதாமல் மறைந்துவிட்டால், அவருடைய தனிப்பட்ட நகைகள் அனைத்தும் இந்து வாரிசுரிமைச் சட்டம், 1956-இன் படி அவரது சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு சமமாகப் பிரித்து வழங்கப்பட வேண்டும். இந்த வாரிசுகள் பட்டியலில், மாமியாரின் கணவர், மகன்கள், மகள்கள், மற்றும் தாய் ஆகியோர் அடங்குவர். இங்கு கவனிக்க வேண்டிய மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், மருமகளுக்கு இந்த நேரடி வாரிசுப் பிரிவில் இடம் இல்லை.
ஒரு மருமகள் அந்த நகைகளை உரிமையாகப் பெற வேண்டுமெனில், அவருடைய கணவர் தனக்குக் கிடைத்த பங்கைப் பிரியப்பட்டு மருமகளுக்கு வழங்கலாம் அல்லது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பரஸ்பர சம்மதத்துடன் முடிவெடுத்து மருமகளுக்கு வழங்கலாம். மேலும், திருமணம் முடித்த மகள் அல்லது மகன் என எந்தப் பாகுபாடும் இல்லாமல், மகன் மற்றும் மகளுக்கு சம பங்குரிமை உண்டு. எனவே, உயில் இல்லாத நிலையில், நகைகளின் உரிமையானது பிள்ளைகளுக்கே சென்று சேரும்; மருமகளுக்குச் சட்டப்படி நேரடியாக உரிமையில்லை என்பதே சட்ட விதியாகும்.
