டெல்லியில் உள்ள செங்கோட்டை அருகே கடந்த 10-ஆம் தேதி நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. இந்தத் தாக்குதலில் பலர் படுகாயமடைந்துள்ளனர். இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரித்து வரும் நிலையில், இந்தச் சம்பவம் ஒரு தற்கொலைப்படைத் தாக்குதல் என்று என்ஐஏ நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது.

இந்தத் தாக்குதலில் தொடர்புடைய பலர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில், காஷ்மீரின் புல்வாமாவைச் சேர்ந்த மருத்துவர் உமர் உன்-நபி என்பவர் இந்தச் சம்பவத்தின் முக்கிய குற்றவாளி என்று என்ஐஏ கண்டறிந்தது. தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரை அவருக்கு வாங்கித் தந்ததாகக் காஷ்மீரைச் சேர்ந்த அமீர் ரஷீத் அலி என்பவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், டெல்லியில் கார் குண்டுவெடிப்புத் தாக்குதலை நடத்துவதற்கு முன்னர் முக்கிய குற்றவாளியான மருத்துவர் உமர் உன்-நபி பேசிய வீடியோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில், கார் குண்டுவெடிப்புத் தாக்குதலை நியாயப்படுத்தும் வகையில் உமர் பேசியுள்ளார். ‘தற்கொலைப்படைத் தாக்குதலைச் சிலர் தவறாகப் பேசுகிறார்கள.

உண்மையில் அது தியாக நடவடிக்கை’ என்று உமர் பேசியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீவிரவாதத் தாக்குதல் நடத்திய நபரே, அதை நியாயப்படுத்திப் பேசியிருப்பது மேலும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. தேசிய அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் தொடர்பாக என்ஐஏ தொடர்ந்து முக்கியத் தடயங்களைச் சேகரித்து வருகிறது.