பெண்களை மையமாகக் கொண்டு உருவான ‘தி கேர்ள் பிரெண்ட்’ திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, அனு எம்மானுவேல், தீக்ஷித் ஷெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராகுல் ரவீந்திரன் இயக்கிய இத்திரைப்படம் கடந்த 7ஆம் தேதி வெளியானது. படம் வெளியான நாளிலிருந்து நல்ல வரவேற்பைப் பெற்றுவரும் நிலையில், இதில் ராஷ்மிகா மந்தனாவின் சிறப்பான நடிப்பு பரவலாகப் பாராட்டப்பட்டு வருகிறது. குறிப்பாக, தயாரிப்பாளர், இசையமைப்பாளர் உட்படப் பல திரைப் பிரபலங்கள் இவரது நடிப்புக்காக தேசிய விருது கிடைக்க வேண்டும் என்று வெளிப்படையாகப் பேசி வருகின்றனர்.

இந்த நிலையில், ‘தி கேர்ள் பிரெண்ட்’ படத்தின் வெற்றி விழாவில் நடிகை ராஷ்மிகா மந்தனா மிகவும் நெகிழ்ச்சியுடன் பேசினார். அவர் பேசுகையில், “எங்களது நோக்கம் என்னவென்று நீங்கள் அனைவரும் புரிந்துகொண்டது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நீங்கள் படத்துடன் ஒன்றிவிட்டீர்கள். அதுவே எனக்கு மிகப் பெரிய விருதுதான். தேசிய விருது உட்பட எந்த விருது பற்றியும் எனக்குத் தெரியாது. இனிமேல் அவை தேவையில்லை.

நீங்கள் அனைவரும் படத்தைப் பார்த்து, அந்த உணர்வை உள்வாங்குகிறீர்கள் இல்லையா? அது மட்டுமே எனக்குப் போதும். எனக்கு அதுவே பிடித்துவிட்டது. இப்போது என்ன சொல்வதென தெரியவில்லை. அனைவருக்கும் மிக்க நன்றி” என்று கூறி, ரசிகர்களின் ஆதரவே தனக்குப் பெரிய விருது எனத் தெளிவாகத் தெரிவித்தார்.