தேனி மாவட்டம், கம்பம் பகுதியைச் சேர்ந்த 15 வயதுப் பள்ளி மாணவி ஒருவர், தேனியில் உள்ள தனது தாத்தா வீட்டில் தங்கி, ஓர் உள்ளூர் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த நவம்பர் 7-ஆம் தேதி பள்ளிக்குச் சென்ற அந்த மாணவி, அதன்பிறகு வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த அவரது தாயார், உடனடியாக தேனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், மாணவியைத் தீவிரமாகத் தேடி வந்தனர். விசாரணையில், அதே கம்பம் பகுதியைச் சேர்ந்த 15 வயதுச் சிறுவன், அந்த மாணவியைக் காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி அழைத்துச் சென்றுள்ளான் என்பது தெரியவந்தது.
மேலும், அந்தச் சிறுவன் மாணவியைத் தனது பாட்டி வீட்டில் தங்க வைத்திருந்ததும் போலீஸார் விசாரணையில் உறுதியானது. இதையடுத்து, மாணவி இருந்த இடத்துக்கு விரைந்து சென்ற போலீஸார், அவரை மீட்டனர்.
மாணவியை அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் அந்தச் சிறுவனை, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அந்தச் சிறுவன் பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு கூலி வேலை பார்த்து வந்ததாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
