உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்த 24 வயது இளம் பெண் ஒருவர், கடந்த 2022 ஆம் ஆண்டு எத்மத்பூர் என்ற இடத்தில் மூன்று பேர் கொண்ட கும்பலால் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு ஆக்ரா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் குற்றவாளிகள் தரப்பில் 40 வயதான வழக்கறிஞர் ஜிதேந்திர சிங் தியாகரே ஆஜராகி வருகிறார். வழக்கு விசாரணையில் இருந்தபோது, வழக்கறிஞர் ஜிதேந்திர சிங், பாதிக்கப்பட்ட இளம் பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்டு, வழக்கை நீதிமன்றத்திற்கு வெளியே பேசி சமாதானமாக முடித்துக்கொள்ளலாம் என்று கூறி அழைத்துள்ளார்.
வழக்கறிஞரின் பேச்சை நம்பிய அந்தப் பெண், அவருடன் காரில் புறப்பட்டுள்ளார். குபேர்பூருக்கு அழைத்துச் சென்ற வழக்கறிஞர், பலாத்காரக் குற்றவாளிகளில் ஒருவரிடம் பேசி பண பேரம் நடத்தியுள்ளார். இரவாகியும் தீர்வு கிடைக்காத நிலையில், மறுநாள் பேசுவதாகக் கூறி, ஆக்ராவில் உள்ள ஒரு விடுதிக்கு அந்தப் பெண்ணை அழைத்துச் சென்று தங்க வைத்துள்ளார்.
இதற்கிடையில், காரில் வைத்து அந்தப் பெண்ணுக்கு வழக்கறிஞர் ஜிதேந்திர சிங் கட்டாயப்படுத்தி மது கொடுத்ததாகக் கூறப்படுகிறது. விடுதி அறையில் மது போதையில் இருந்த அந்தப் பெண்ணை, வழக்கறிஞர் ஜிதேந்திர சிங் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த சம்பவத்தில் இருந்து தப்பித்த அப்பெண் மறுநாள் காலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வழக்குப் பதிவு செய்ததையடுத்து, வழக்கறிஞர் ஜிதேந்திர சிங் தலைமறைவாகியுள்ளார்.
இந்நிலையில், அவர் தனது வீட்டிலேயே பதுங்கி இருப்பது போலீசாருக்குத் தெரியவந்தது. அவரை கைது செய்ய போலீசார் விரைந்து சென்றபோது, போலீஸ் வருகையை அறிந்த ஜிதேந்திர சிங் தப்பியோடும் நோக்குடன் தனது வீட்டின் மாடியில் இருந்து பக்கத்து வீட்டிற்கு குதித்துள்ளார். இதில் அவரது இரு கால்களும் முறிந்தன. அவரை மடக்கிப் பிடித்த போலீசார், ஜிதேந்திர சிங்கை கைது செய்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
பலாத்கார வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணையே வழக்கறிஞர் ஒருவர் மிரட்டி, மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
