டெல்லியில் உள்ள செங்கோட்டை அருகே திங்கள்கிழமை மாலை நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குக் காரணமாகக் கருதப்படும், டாக்டர் உமர் குறித்த விசாரணையில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

புல்வாமாவைச் சேர்ந்த உமர் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தாக்குதலைத் தொடர்ந்து, அவரது தாயார் மற்றும் சகோதரர் ஜம்மு காஷ்மீரில் கைது செய்யப்பட்ட நிலையில், உமரின் மைத்துனி ஊடகங்களுக்குப் பரபரப்பான தகவல்களை வெளியிட்டுள்ளார்.

உமரின் மைத்துனி அளித்த பேட்டியின்படி, வெள்ளிக்கிழமை உமருடன் பேசியதாகவும், அப்போது, அதிக முறை அழைப்புகள் செய்து தன்னைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று தனது தாயிடம் அவர் கூறியதாகவும் தெரிவித்துள்ளார். தான் நூலகத்தில் பரபரப்பாக இருப்பதாக உமர் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீநகர் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். முடித்த உமர், அல் ஃபலா மருத்துவக் கல்லூரியில் மருத்துவராகப் பணியாற்றியவர் என்றும், இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவத்திற்கு முன்பே போலீஸார் இவரைத் தேடி வந்தனர் என்றும் தெரியவந்துள்ளது.

தற்போது, உமரின் குடும்ப உறுப்பினர்களிடம் நடத்தப்படும் விசாரணையின் மூலம் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.