​தேசிய அரசியலில், பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) நெருக்கமானதாக  ஆர்.எஸ்.எஸ் பார்க்கப்படும் சூழலில், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் அவர்கள் சமீபத்தில் ஆற்றிய உரை, அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஒரு குறிப்பிட்ட கட்சியை ஆதரிப்பதில்லை. கொள்கைகளை மட்டுமே ஆதரிக்கிறது,” என்று திட்டவட்டமாகக் குறிப்பிட்டார். அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என்ற கொள்கையை பாஜக முன்வைத்ததால் அவர்களுக்கு ஆதரவு அளித்ததாகவும், அதே கொள்கையை காங்கிரஸ் கட்சி முன்வைத்திருந்தால், தங்கள் தொண்டர்கள் நிச்சயம் அவர்களையும் ஆதரித்திருப்பார்கள் என்றும் பகவத் பகிரங்கமாகத் தெரிவித்தார்.

​ஆர்.எஸ்.எஸ்ஸின் இந்தப் பேச்சு, தங்கள் அமைப்பு ‘ராஷ்டிர நீதி’ (தேசக் கொள்கை)-க்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பதாகவும், ‘ராஜ் நீதி’ (அரசியல் கட்சி)-க்கு அல்ல என்றும் நிலைநிறுத்த முயற்சி செய்வதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

இருப்பினும், ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களின் அசைக்க முடியாத வாக்கு வங்கி பாஜகவுக்கு சாதகமாக உள்ள நிலையில், தேர்தலை நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில், மோகன் பகவத் அவர்களின் இந்தக் கருத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளால் எவ்வாறு பார்க்கப்படப் போகிறது என்ற எதிர்பார்ப்பு தேசிய அரசியலில் எழுந்துள்ளது.