நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க.) உட்கட்சிப் பூசல் மற்றும் பண முறைகேடு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதால், தற்போது ஒரு பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் பணம் பெற்றுக் கொண்டு கட்சிப் பொறுப்புகள் வழங்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், 7 பேர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதால் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

நடிகர் விஜய் அறிவித்த மகளிர் அணிப் பொறுப்பாளர்களை, மாவட்டப் பொறுப்பாளர்களான கோபி மற்றும் தனம் ஆகியோர் மாற்றியதுதான் இந்த நீக்கத்திற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. ஏற்கெனவே திருவண்ணாமலை, விழுப்புரம், திருச்சி போன்ற மாவட்டங்களிலும் பணம் பெற்றுக் கொண்டு கட்சியில் பொறுப்புகள் வழங்கப்படுவதாக நிர்வாகிகள் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், மயிலாடுதுறையில் ஏற்பட்டுள்ள இந்தச் சம்பவம் த.வெ.க. தலைமைக்குப் பெரும் தலைவலியை உருவாக்கியுள்ளது.
